தாள் ஆகிய புணையைச்
சேர்ந்தார்க்கல்லது;
அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், ''அறஆழி'' அந்தணன் என்றார். ''அறஆழி'' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, ''அதனை உடைய
அந்தணன்'' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், ''நீந்தல் அரிது'' என்றார். இஃது ஏகதேச உருவகம். கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ''அணிமா'' வை முதலாக உடையன எனவும், ''கடை இலா அறிவை'' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும்
அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் |