தொடர்ந்த தமனியத் தியன்ற தாமரைப் பள்ளிக் கலனணி யாயங் கைதொழ வேறிப் புலம்புகொண் மஞ்ஞையிற் புல்லெனச் சாம்பிப் புனல்கொல் கரையி னினைவனள் விம்மிப் பாவையும் படரொடு பருவரல் கொள்ள இருவர் நெஞ்சமு மிடைவிட லின்றித் திரிதர லோயாது திகிரியிற் சுழல ஊழ்வினை வலிப்பி னல்லதி யாவதும் சூழ்வினை யறுத்த சொல்லருங் கடுநோய்க் காமக் கனலெரி கொளீஇ யாமம் தீர்வது போலா தாகித் திசைதிரிந் தீர்வது போல விருளொடு நிற்பச் சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி நீந்தி யன்ன நினைப்பின ராகி முழங்குகடற் பட்டோ ருழந்துபின் கண்ட கரையெனக் காலை தோன்றலின் முகையின பூக்கண் மலரப் புலம்பிய பொய்கைப் பாற்கே ழன்னமொடு பல்புள் ளொலிப்பப் பரந்துகண் புதைஇய பாயிரு ணீங்கிப் புலர்ந்தது மாதோ பொழிறலைப் பெயர்ந்தென் பொழிறலைப் பெயர்ந்த புலம்புகொல் காலை எழின்மணி விளக்கி னேமம் போகிக் கலையினுங் களியினுங் காமுறக் கவைஇய மழலைக் கிண்கிணி மடவோர் மருட்டப் புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய திருவீழ் கட்டிற் றிறத்துளி காத்த வல்வேற் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட பெயர்வரி வாசனை கேட்டபி னுயர்திறல் ஊழி னல்லது தப்புத லறியார் காலனுங் கடியு நூலொண் காட்சியர் யாக்கை மருங்கிற் காப்புக் கடம்பூண் டருந்துறை போகிய பெருந்தகை யாளர் உணர்வு மொளியு மூக்கமு முணர்ச்சியும் புணர்வின் செல்வமும் போகமுஞ் சிறப்ப அமிழ்தியல்

|