பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   265
Zoom In NormalZoom Out


 

குமரனொ டொப்போன் மற்றிவள்
புதைபூண் வனமுலைப் போகம் பெறுகென
மரபறி மகடூஉப் பரவினள் பாட
அன்ன னாக வென்னயந் தோனெனப்
பொன்னிழை மாதர் தன்மனத் திழைப்பத்
தலைநாட் டான மிலக்கணத் தியைந்தபின்
மாயிரு ஞாலத்து மன்னவன் மகளே
ஞாயிறு படாமற் கோயில் புகுதல்
இன்றை நன்னாட் கியல்புமற் றறிகெனத்
தொன்றியன் மகளிர் தொழுதனர் கூறச்
செய்வதை யறியலள் வெய்துயிர்ப் பளைஇத்
தெய்வத் தானம் புல்லென வையத்
திலங்கிழை மாத ரேற்ற வேறிப்
பொலந்தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதிற் கதுமென நோக்கிய
அந்த ணாளற் கணிநல னொழியப்
பெருநகர் புகழத் திருநகர் புக்கபின்
இகலடு தானை யிறைமீக்கூறிய
தவலரும் வென்றித் தருசகன் றங்கை
கொங்கலர் கோதை நங்கைநம் பெருமகள்
புகழ்தற் காகாப் பொருவில் கோலத்துப்
பவழச் செவ்வாய்ப் பதுமா பதிதன்
கன்னி நோன்பின் கடைமுடி விதனொடு
முன்னிமுற்றுமின்ன தீமென
நச்சுவனர் வரூஉ நான்மறை யாளரை
அச்சங் கொள்ள வகற்றன்மி னென்றுதன்
ஆணைவைத் தகன்றனள் யாண ரமைத்தவிஃ
தறிமி னீரெனப் பொறியமை புதவிற்
கடைமுதல் வாயிற் கடுங்காப் பிளையரை
அடைமுது மாக்க ளமைத்தகன் றமையிற்
கண்டோர் பெயர்த்துக் காண்ட லுறூஉம்
தண்டா வனப்பின் றகைமைய ளாகிய
கன்னி யாகங் கலக்கப் பெறீஇயரெனப்
பன்மலர்க் காவினுட் பகலு மிரவும்
உறையு ளெய்திய நிறையுடை நீர்மை
இளையோ னமைந்த காலை மற்றுத்தன்
தளையவிழ் கோதைத் தைய லிவளெனும்
மைய லுள்ளமொடு பைதலெய்தி