லமரக் கழனி யாரல் கவுளகத் தடக்கிப் பழன மருதிற் பார்ப்புவாய் சொரிந்து கருங்கா னாரை நரன்றுவந் திறுப்பத் துணைபிரி மகளி ரிணைமலர் நெடுங்கண் கட்டழன் முத்தங் காலப் பட்டுடைத் தனிக்கா ழல்குற் பனிப்பசப் பிவர அழல்புரை வெம்பனி யளைஇ வாடை உழல்புகொண் டறாஅ தொல்லென் றூர்தரச் செங்கேழ் வானக் கம்பலம் புதைஇ வெங்க ணீர தாகி வேலிற் புன்கண் மாலை போழத் தன்கண் தீராக் கற்பிற் றேவியை மறந்து பேராக் கழற்காற் பெருந்தகை புலம்பிப் பைவிரி யல்குற் பதுமா பதிவயிற் கைவரை நில்லாக் காம வேகம் அன்றுமுத லாகச் சென்றுமுறை நெருங்கப் பவழமு மணியும் பாங்குபட விரீஇத் திகழ்கதிர்ப் பசும்பொற் சித்திரச் செய்கை வனப்பமை வையந் தனக்குமறை யாகிய கஞ்சிகை கடுவளி யெடுப்ப மஞ்சிடை வானர மகளிரிற் றானணி சுடர முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத் தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர் சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து நண்ண வருவோள் போலு மென்கண் ஆற்றே னவட னஞ்சாந் திளமுலை நோற்றே யாயினு நுகர்வல் யானெனத் தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய ஐதேந் தல்கு லவந்திகை வீவும் உறுதுணைத் தோழ னிறுதியு நினையான் மாண்ட சூழ்ச்சி மந்திர வமைச்சர் வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி உறுவகை யண்ண றறுகண் பொருந்தலும் கைவயிற் கொண்ட கழுநீர் நறும்போது

|