காவிற் குறிஞ்சி முதலாப் பன்மர மெல்லாம் பணிந்தன குரங்க மைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்து மெய்ம்மறப்ப ஏனோர்க் கிசைப்பி னேதந் தருமென மானேர் நோக்கி மனத்திற் கொண்டு கண்கவர் வுறூஉங் காமனிற் பின்னைத் தும்புரு வாகுமித் துறைமுறை பயின்றோன் இவனிற் பின்னை நயனுணர் கேள்வி வகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன் உதையணன் வல்லனென் றுரைப்ப வவனினும் மிகநனி வல்லனித் தகைமலி மார்பனென் றுள்ளங் கொள்ளா வுவகைய ளாகி ஒள்ளிழை தோழியோ டுதயணற் பேணிக் கழிபெருங் காமங் களவினிற் கழிப்பி ஒழுகுவனண் மாதோ வுரிமையின் மறைந்தென். மறையோம் பொழுக்கின் மதலை கேண்மதி நிறையோம் பொழுக்கி னின்னல முணரேம் ஒருபே ருலகம் படைத்த பெரியோன் உருவுகரந் தொழுக லுணரா ராகக் கொன்றையம் பசுங்காய் பெருக்கியும் பயற்றின் நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியுங் குன்றா இன்றீங் கரும்பினைச் சுருக்கியும் விண்டலைத் துன்னரும் விசும்புற நீட்டிய நெறியும் இன்னவை பிறவு மிசைவில வெல்லாம் படைத்தோன் படைத்த குற்ற மிவையென எடுத்தோத் துரையி னியம்பி யாஅங் கியானை வணக்கு மைங்கதி யருவினை வீணை வித்தகத் தவனினு மிக்கதன் மாணல முணரே மடவிய னிவனென நாணக் காட்டு நனித்தொழில் புனைந்தேம் மாணக் காட்டுநின் மாணாக் கியரேம் ஆயினெ மினியென

|