இஃது, மேற்கூறும் புணர்ச்சிவகையான் நான்கா மென்பதூஉம், அவை சொல்வகையான் நான்காமென்பதூஉம், புணர்வது சொல்லும், சொல்லுமேயன்றி, எழுத்தும் எழுத்துமென்பதூஉதறும் உணர்த்துதல் நுதலிற்று. அவற்றுள்-நிலைமொழி வருமொழி யெனப்பட்டவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறு ஆகும் எழுத்தொடு குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய-நிறுத்த சொல்லினது ஈறாகின்ற எழுத்தினோடு அதனைக் குறித்து வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரை புணர்க்கும் காலும்-பெயர்ச் சொல்லொடு பெயர்ச் சொல்லைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காலும்-பெயர்ச் சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலோடு பெயரை புணர்க்கும் காலும்-வினைச் சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு தொழிலை புணர்க்கும் காலும்- வினைச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ நான்கே மொழிபுணர் இயல்பு-திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அந் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு. எ - டு: சாத்தன் கை, சாத்தன் உண்டான், வந்தான் சாத்தன், வந்தான் போயினான் எனக் கண்டுகொள்க. இடையும் உரியும் பெயர் வினைகளை அடைந்தல்லது தாமாக நில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறப்பட்டது. (6)
|