5. உகர ஈறு

சுட்டுப் பெயர்க்குச் சாரியை

264.சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்
ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை.

இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொற்கள் உருபு புணர்ச்சியிற் சொன்ன இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை ஒற்று இடை மிகா - அவ்விடத்து வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா.

எ - டு : அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

` ஒற்று இடைமிகா ' என்றதனால், சாரியை வகுப்ப வல்லெழுத்து விழாதென்பது பெற்றாம். ` வல்லெழுத்தியற்கை ' என்றதனால், இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை, ஒடுவின்குறை என வரும்.

(61)