1. மெல்லொற்று ஈறுகள்

வேற்றுமையில் னகார ஈறு

333.னகார இறுதி வல்லெழுத் தியையின்
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

இஃது, னகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) னகார இறுதி வல்லெழுத்து இயையின் - னகார வீற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின், றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கு - றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்.

எ - டு :பொற்குடம் ; சாடி ; தூதை , பானை என வரும்.

(37)