இஃது, இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) இல் என் கிளவி இன்மை செப்பின் - இல் என்னும் சொல் புக்குறையும் இல்லை உணர்த்தாது ஒரு பொருளது இல்லாமையை உணர்த்துமிடத்து, வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் - அல்வழி வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயல்பாகலும் ஆகாரம் மிக்குமுடிதலும் ஆகிய இம் முடிபு நான்கும், கொளத்தகும் மரபின் ஆகு இடன் உடைத்து - இச்சொல்லிற்கு முடிபாகக் கொளத்தகும் மரபானே இதன் முடிபு ஆகும் இடன் உடைத்து. `கொளத்தகு மரபு' என்றதனான், வல்லெழுத்து மிக்குவழி ஐகாரம் வருதலும், ஆகாரம் மிக்கவழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. இயல்பு முற்கூறாது ஒழிந்ததனால், வல்லெழுத்து மிகுதி ஆகாரம் வந்த வழி மிக்கே முடிதலின் சிறப்புடைத்தாதலும், ஐகாரம் வந்தவழி மிகுதலும் மிகாமையுமுடைமையின் சிறப்பின்றாதலும் கொள்க. எ - டு : இல்லைக்கல், இல்லைகல்; இல்கல்; இல்லாக்கல்; சுனை, துடி, பறை என வரும். இல்லைக்கல், இல்லைகல் என்பன இல்லை என்னும் ஐகாரவீற்றுச் சொல் முடிபன்றோவென்றும், இல்லாக்கல் என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர்மறையாகிய ஆகாரவீற்றுச் சொல்லது முடிபன்றோ வென்றும், இல்கல் என்பது பண்புத்தொகை முடிபன்றோ வென்றும் கூறின் அம் முடிபுகளோடு - இம் முடிபுகள் எழுத்தொப்புமையன்றி, இவை ஓசைவேற்றுமையுடைய வென்பது போலும் கருத்து. அவ்வோசை வேற்றுமையாவன, ஐகார வீறாயவழி அவ்வைகாரத்து மேல் ஒலியூன்றியும், லகார வீறாயவழி அந்த லகாரவொற்றின்மேல் ஒலியூன்றியும், அந்த லகாரமீது இயல்பு முடிபாயவழிப் பண்புத் தொகைபோல ஒரு திரண்மையாக ஒலியாது இடையற்று லகாரத்து மேல் ஒலியூன்றியும், ஆகாரவீறாய வழி ஒரு திரண்மையாய் அவ்வாகாரத்து மேல் ஒலியூன்றியும், ஆண்டு லகார வீறாயவழி ஒரு திரண்மையாக ஒலியாது அந்த லகாரத்துமேல் ஒலியூன்றியும் வரும் வேற்பாடுகள் போலும். இல் என்பது எதிர்மறை வினைக்குறிப்பு முற்று விரவுவினை. (77)
|