2. இடையொற்று ஈறுகள்

ஏழ் முன் அளவு முதலிய பெயர்கள்

393.நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்கம் இன்றே.

இதுவும் , மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது .

(இ-ள்) நூறு ஊர்ந்துவரும் ஆயிரக்கிளவிக்கு - (அவ் ஏழ் என்பது ) நூறு என்னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக்கிளவியாகிய நூறாயிரம் என்பதற்கு,கூறியநெடு முதல் குறுக்கம் இன்று-(முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இன்று.

எ - டு : ஏழ் நூறாயிரம் என வரும்.

`கூறிய' என்றதனான், நெடுமுதல் குறுகி , உகரம் பெற்று எழுநூறாயிரம் என்றும் ஆம்.

இவ்விலேசினானே ஏழாயிரம் என்றும் ஆம்.

`இன்னும் அதனானே' இயல்புகணத்து முடிபு கொள்க.

எழுஞாயிறு, எழுநாள் என வரும்.

(97)