2. இடையொற்று ஈறுகள்

வேற்றுமையில் ளகர ஈறு

397.ளகார இறுதி ணகார இயற்றே.

இஃது, ளகார ஈற்றிற்கு ணகார ஈற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ளகார இறுதி ணகார இயற்று - ளகார (ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண்) ணகார ஈற்று இயல்பிற்றாய் (வன்கணம் வந்தால்) ளகாரம் டகாரமாய்த் திரிந்து முடியும்.

எ - டு : முட்குறை; சிறை, தலை,புறம் என வரும்.

(101)