இஃது , ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறு என்னும் அடையடுத்து ஆயிரம் என்பது முடியுமாறு கூறுகின்றது. நூறாயிரம் முன்வரு காலை முதல் நிலைக்கிளவி நூறு என் இயற்கை - நூறாயிரம் என்னும் அடையடுத்த மொழி ( ஒன்று முதல் ஒன்பான்கள்) முன் வருங் காலத்து முதனிலைக் கிளவியாகிய ஒன்று என்னும் எண் (மேல் ஒன்று முதல் ஒன்பான்களோடு முடிந்த) நூறு என்னும் சொல் அவ் வொன்றனோடு முடிந்த விகார இயற்கை எய்தி முடியும். வழி நிலைக்கிளவியாகிய இரண்டு முதல் எண்கள் விகாரம் எய்தியும் எய்தாதது இயல்பாயும் முடியும். எ - டு : ஒரு நூறாயிரம் என வரும் . இரு நூறாயிரம் , இரண்டு நூறாயிரம் ; முந்நூறாயிரம் , மூன்று நூறாயிரம் ; நானூறாயிரம் , நான்கு நூறாயிரம் , ஐந்நூறாயிரம் , ஐந்து நூறாயிரம் ; அறுநூறாயிரம் , ஆறு நூறாயிரம் ; எண்ணூறாயிரம் , எட்டு நூறாயிரம் ; ஒன்பது நூறாயிரம் என வரும். உரையிற் கோடல் என்பதனால் , தொள்ளாயிரம் என்ற முடிபினோடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. `முன்' என்பதனான் இன்சாரியை பெற்று ஒன்பதினூறாயிரம் என்றும் ஆம். `நிலை' என்றதனான் , மூன்றும் ஆறும் இயல்பாய் முடியும் முடிபின்கண் நெடுமுதல் குறுகாமை கண்டுகொள்க. (65) இன்னும் அதனானே நானூறாயிரம் என்புழி வருமொழி நகரக்கேடு கொள்க.(65)
1.இலக்கம், கோடி யென்னும் எண்ணுப் பெயர்கள் இவ்வியலிற் கூறப்படாமையால் பழந்தமிழர்க்கு 99,999 வரைதான் எண்ணத் தெரிந்திருந்தது என்று சிலர் கொள்வர் . இலக்கம் கோடி என்பன குற்றியலுகரச் சொற்களல்லவென்றும் குற்றுகரச் சொற்களே இவ்வியலின் புணர்த்துக் காட்டப்படுவன வென்றும் இலக்கத்தின் மறு பெயரான நூறாயிரம் என்னும் சொல்லும் பத்து நூறாயிரம் வரை புணர்த்தற்கிடமும் அடுத்த (எழு . 471) நூற்பாவிற் கூறப்பட்டுள வென்றும் இலக்கம் கோடி என்னும் பெயர்கள் முறையே பெரிய இலக்கம் கடைசி எண் என்று பொருள்படும் தனித்தமிழ்ச் சொற்களே என்றும் அறிந்துகொள்க. (பாவாணர்.)
|