இஃது , நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறுசினை ஒழிய இன ஒற்று மிகும் - நூறு என்னும் சொல் ஒன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து ஈறாகிய குற்றியலுகரமும் அவ்வுகரம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப (சினைக்கு) இனமாகிய இன ஒற்று மிக்கு முடியும். எ - டு : நூற்றொன்று ; இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என வரும். `ஈறுசினை' என்று ஓதிய மிகையானே நூறு என்பதனோடு பிற எண்ணும் பிற பொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் முடியுமாறு கொள்க. நூற்றுக்கோடி , நூற்றுப்பத்து , நூற்றுத்தொண்ணூறு எனவும் ; நூற்றுக்குறை, நூற்றடுக்கு எனவும் வரும். (66)
|