6.வினையியல்

உயர்திணை வினை

குறிப்பு வினை முற்று

214அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியுங் குறிப்பே காலம்.
 

அன்மை இன்மை உண்மை வன்மை யென்னும் பொருள் பற்றி வருவனவும் , அவை போல்வன பிறவும் , குறப்புப் பொருண்மையோடு பொருந்தும் எல்லாச் சொல்லுங் காலங் குறிப்பா னுணரப்படும்; எ - று.

காலங் குறிப்பா னுணரப்படுமெனவே , இவையும் வினைக் குறிப்பா மென்றவாறாம்.

எ - டு : அல்லன் , அல்லள் , அல்லர் எனவும் ; இலன் , இலள் , இலர் எனவும் ; உளன் , உளள், உளர் எனவும்; வல்லன் , வல்லள் , வல்லர் எனவும வரும்.

பொதுப்படக் கூறியவதனான் , பொருளிலன் , பொருளிலள் , பொருளிலர் என உடைமைக்கு மறுதலையாகிய இன்மையுங் கொள்ளப்படும்.

இவை ஒரு வாய்பாடேபற்றிப் பிறத்தலின் வேறு கூறினார்.

பண்போடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின் ; இன்மை , பொருட்கு மறுதலையாகலின் , பொருளின் கட்கிடக்கும் பண்பெனப்படாது. அன்மையும் உண்மையும் பண்பிற்கு மொத்தலிற் பண்பெனப்படா , என்னை ? குணத்திற்குக் குணமின்மையின் , வன்மை - ஆற்றல் ; அதுவுங் குணத்திற்கும் உண்டாதலிற் குணமெனப்படாது. ஊறெனின் அது பண்பாயடங்கும் . அதனாற் பொருட்கட் கிடந்து தனக்கோர் குணமின்றித் தொழிலின் வேறாய குணத்தின் அன்மை முதலாயின வேறெனப்படும் . பண்பெனினுங் குணமெனினுமொக்கும். இக் கருத்தே பற்றி யன்றே , ஆசிரியர் இன்மையும் உண்மையு முணர்த்துஞ் சொற்களை முடிப்பாராயிற்றென்பது.

என்ன கிளவியுமென்றது அன்னபிறவு மெனப்பட்ட வற்றையேயாகக் கொள்க.

குறிப்பே காலம் என்றவழிக் குறிப்பென்றது குறிக்கப்படுவதனை.

அன்னபிறவு மென்றதனான் , நல்லன் , நல்லள் , நல்லர் . தீயன் , தீயள் , தீயர் , உடையன் , உடையள் , உடையர் , எனவித்தொடக்கத்தன வெல்லாங் கொள்க.

(17)