6.வினையியல்

விரவு வினை

முன்னிலைப் பன்மை வினைமுற்று

224இர் ஈர் மின்னென வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்.
 

இர், ஈர்,மின்னென்னும் ஈற்றையுடைய மூன்று சொல்லும், பல்லோர்கண்ணும் பலவற்றின்கண்ணுஞ் சொல் லுதற்கண், ஒத்தவுரிமைய; எ - று.

இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்தும் பெற்றும் ஈரீறு ஆரீற்றிற்குரிய எழுத்துப் பெற்றும். மூன்றுகாலம் பற்றி வரும். மின்னீறு பிறவெழுத்துப் பெறாது ஏற்றவழி உகரம் பெற்று, எதிர்காலம் பற்றி வரும்.

எ - டு : உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் எனவும்; உண்டீர், உண்ணாநின்றீர், உண்குவீர் எனவும்; உண்மின், தின்மின், உரிஞுமின் எனவும் வரும். ஒழிந்த வெழுத்தோடு மொட்டிக் கொள்க.

முன்னிலைவினைக்குறிப்பு, உயர்திணைவினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி ஐகாரமும் ஆயும் இருவும் ஈருமென்னு நான்கீற்றவாய், கழலினை, நாட்டை, பொன்னன்னை கரியை எனவும்; கழலினாய், நாட்டாய், பொன்னன்னாய் கரியாய் எனவும்; கழலினிர், நாட்டினிர், பொன்னன்னிர் கரியிர் எனவும்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர், கரியீர் எனவும் வரும். ஒழிந்த பொருளொடு மொட்டிக் கொள்க. போறி என இகரவீற்று வினைக்குறிப்புமுண்டா லெனின் : - போன்றனன், போன்றான் என்பன போல வந்து தெரிநிலை வினையாய் நின்றதென மறுக்க.

அஃறிணை வினைக்குறிப்பும் உயர்திணை வினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி வருதலின், அவற்றை யெடுத்தோதிற் றென்னையெனின் :- அன்மை முதலாயின பொருள் பற்றி வந்தனவெனக் கிளந்தோதலாஞ் சுருக்கத்தன வன்மை யானும், சினைமுதற்கிளவி பண்பு மடுத்து வருதல் உயர்திணை யதிகாரத்துப் பெறப்படாமையானும் அவற்றை யோதுவார் ஏனைப் பொருளுமுடனோதினார்.

முன்னிலை வினைக்குறிப்புப் பலவாதலானும், எடுத்தோதா வழிப்படுவதோர் குறைபாடின்மையானும். இவற்றை யுய்த்துணர வைத்தா ரென்பது, அல்லது, எடுத் தோத்தில்வழி உய்த்துணர்வதெனினுமமையும்.

முன்னிலை வினையீற்றான் எதிர்காலம்பற்றி வரும் இகரத்தையும் மின்னையும் முதலும் இறுதியும் வைத்து, மூன்று காலமும்பற்றி வரும் நான்கீற்றையுந் தம்மு ளியைய இடை வைத்தார். அல்லது, பொருண்மை கருதாது சூத்திர யாப்பிற்கேற்ப வைத்தா ரெனினுமமையும்.

(27)