ஒரு வாய்பாட்டானும் மற்றப் பல வாய்பாட்டானும் வினையெஞ்சுகிளவி அச்சொற்கண் முறையான் முடியாது அடுக்கிவரினும் , முன்னின்றவெச்சம் முடிய ஏனையவும் பொருண் முடிந்தனவாம் ; எ - டு : உண்டு தின்றோடிப் பாடி வந்தான் எனவும் , உண்டு பருகூத் தின்குபு வந்தான் எனவும் வரும். முன்னது முடிய முடியு மென்றாராயினும் , உண்டு தின்று மழைபெய்யக் குளநிறையும் என்றவழி , முன்னதன் றொழிவான் ஏனைய முடியாமையின் பன்முறையான் அடுக்குங்கான் முன்னதன்றொழிலான் முடிதற்கேற்பனவே கொள்க. சொன்முறை முடியாமையாவது தம்மொடு தாமும் பிற சொல்லு முடியாமை. உண்டு வந்தான் ; தின்று வந்தான் எனச் சொற்றொறும் வினையியைதன் மரபு அங்ஙன நில்லாது தம்முனியை பில்லன அடுக்கிவந்து இறுதி வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல்லான் எல்லாம் முடியினும் இழுக்காதென அமைத்தவாறு. வினையெச்சம் பன்முறையானு மடுக்கி ஒரு சொல்லான் முடியு மெனவே , பெயரெச்சம் ஒருமுறையானடுக்கி ஒரு சொல்லான் முடியுமென்பதாம். `நெல்லரியு மிருந்தொழுவர்' ( புறம் - 24) என்னும் புறத்தொகை பாட்டினுள் `தென்கடற்றிரைமிசைப் பாயுந்து' எனவும் `தண்குரவைச் சீர் தூங்குந்து' , எனவும் , `எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து', எனவும் `முந்நீர்ப் பாயும்' எனவும் செய்யுமென்னும் பெயரெச்சமடுக்கி `ஓம்பாவீகை மாவே ளெவ்வி , புனலம் புதவின் மிழலை' என்னும் ஒரு பொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க. ஆங்குத் `தாங்கா வுறையுணல் லூர் கெழீஇய' என்னும் பெயரெச்சம் இடை நிலையாய் வந்தது . பிறவுமன்ன. (36) |