6.வினையியல்

விரவு வினை

பெயரெச்சமும் வினையெச்சமும்

236பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா.
 

பெயரெச்சமும் வினையெச்சமும், செய்தற்பொருளவன்றி அச் செய்தற்பொருண்மை எதிர்மறுத்துச் சொல்லினும், அவ்வெச்சப் பொருண்மையிற் றிரியா; எ - று.

பொருணிலையாவது தம்மெச்சமாகிய பெயரையும் வினையையுங் கொண்டல்லது அமையாத நிலைமை. என் சொல்லியவாறோவெனின்:- செய்யும் செய்த எனவும், செய்து செய்யூ செய்பு எனவும் பெயரெச்சமும் வினையெச்சமும் விதிவாய்பாட்டா னோதப்பட்டமையான், ஆண்டுச் செய்யா, செய்யாது என்னு மெதிர்மறை வாய்பாடு அடங்காமையின், அவை எச்சமாதல் பெறப்பட்டின்று. அதனால், அவையும் அவ்வெச்சப்பொருண்மையிற் றிரியாது பெயரும் வினையுங்கொள்ளுமென எய்தாத தெய்துவித்தவாறு.

எ - டு : உண்ணாவில்லம், உண்ணாச்சோறு, உண்ணாக்காலம், வனையாக்கோல், ஓதாப்பார்ப்பான், உண்ணாவூண் எனவும்; உண்ணாது வந்தான், உண்ணாமைக்குப் போயினான் எனவும் வரும்.

உண்ணா என்பது உண்ணும், உண்ட என்னுமிரண்டற்கும் எதிர்மறையாம். உண்ணாத என்பதுமது. உண்ணாது என்பது உண்டு, உண்ணூ, உண்குபு என்பனவற்றிற் கெதிர்மறை. உண்ணாமைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உணற்கு என்பனவற்றிற்கும் உண்ண எனச் செயற்கென்பதுபட வரும் செயவெனெச்சத்திற்கும் எதிர்மறையாம். உண்ணாமை, உண்ணாமல் என்பனவுந்தாம் அதற்கு எதிர்மறையாம் . பிறவும் எதிர்மறை வாய்பாடுளவேற் கொள்க.

உண்டிலன், உண்ணாநின்றிலன், உண்ணலன், உண்ணான் என முற்றுச் சொல்லும் எதிர்மறுத்து நிற்குமாகலின், பொருணிலை திரியாதென அதற் கோதாராயிற் றென்னையெனின்:- விதிவினைக்கும் எதிர் மறைவினைக்கும் பொதுவாக ஈறுபற்றி ஓதியதல்லது விதிப்பொருளவாகிய வாய்பாடு பற்றி ஓதாமையின், ஆண்டுக் கட்டுரையில்லையென்க.

(39)