உவமத் தொகை உவமவுருபு தொடர்ப் பொருள் போலப் பொருளுர்த்தும் என்றவாறு, எனவே புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என்னும் பொருட்கட் புலிச்சாத்தன், மயின்மாதர் என அப்பொருள் விளக்கும் ஆற்றலில்லன தொகா; ஆற்றலுடையவே தொகுவன வென்பதாம். எ - டு :புலிப்பாய்த்துள் ; மழைவண்கை ; துடிநடுவு ; பொன்மேனி என்பன புலிப்பாய்த்துளன்ன பாய்த்துள் ; மழையன்ன வண்கை ; துடியன்ன நடுவு ; பொன்னன்ன மேனி எனத் தம் விரிப்பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. அஃதேல், புலிப்பாய்த்துளை யொக்கும் பாய்த்துள் ; மழையையொக்கும் வண்கை என விரித்தலின் அவையெல்லாம் வேற்றுமைத் தொகை யெனப்படும் ; அதனான் உவமத் தொகையென ஒன்றில்லையெனின் : - அற்றன்று , சொல்லுவார்க்கு அது கருத்தாயின் வேற்றுமைத் தொகையுமாம். அக் கருத்தானன்றிப் புலியன்ன பாய்த்துள், பொன்மானு மேனி என வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப்பொருட்கட்டொக்கவழி உவமத் தொகையாவதல்லது வேற்றுமைத் தொகை ஆண்டின்மையின் வேற்றுமைத் தொகையாமாறில்லையென்க. உவமவுருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல்லாகலான், வினையும் வினைக்குறிப்பும் பற்றி வரும். (இரண்டாம் வேற்றுமை) அவைபற்றி `என்போற் பெருவிதுப் புறுகநின்னை' யின்னாதுற்ற வறனில் கூற்றே (புறம் - 255) என்புழிப் போலவென்பது குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும், `நும்ம னோருமற்றினைய ராயி - னெம்ம னோரிவட் பிறவலர் மாதோ' (புறம் - 210) என்புழி அன்னோரென்பது இடைச் சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயராகலானும், என்னைப் போல நும்மையன்னோர் எம்மையன்னோரென இரண்டாவது விரித்தாற் கேற்புடைமை யறிக. (18) |