வினைத் தொகை காலத்தின்க ணிகழும்; எ - று. காலத்தியலுமெனப் பொதுவகையாற் கூறியவதனான் மூன்று காலமுங் கொள்க. தொகுதி காலத்தியலுமெனவே அவ்வினை பிரிந்து நின்ற வழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலாற் காலந்தோன்றுமென்றவாறாம். ஈண்டு வினையென்றது எவற்றையெனின் : - வினைச் சொற்கும் வினைப் பெயர்க்கும் முதனிலையாய், உண், தின், செல், கொல், என வினை மாத்திர முணர்த்தி நிற்பனவற்றை யென்பது . இவற்றை வடநூலார் தாதுவென்ப. எ - டு : ஆடரங்கு, செய்குன்று ; புணர்பொழுது ; அரிவாள் ; கொல் யானை ; செல்செலவு என வரும். காலமுணர்த்தாது வினைமாத்திர முணர்த்தும் பெயர், நிலைப்பெயர் முதலாகிய பெயரொடு தொக்குழிக் காலமுணர்த்தியவாறு கண்டு கொள்க. காலமுணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்றுணர்த்துமென்பது `செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் - மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும்.' (எழு - 482) என்பதனாற் கூறினார். தொகைப் பொருளாகிய தாம் பிரிந்தவழிப் பெறப்படாமையின் ஆசிரியர் இவற்றைப் `புணரியனிலையிடை யுணரத் தோன்றா' என்றார். அதனான் இவைதஞ் சொல்லான் விரிக்கப்படாமையிற் பிரிவிலொட்டாம். பெயரெச்சம் நின்று தொக்கதென்றாரால் உரையாசிரியரெனின் : - அற்றன்று ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க்கப்படா ; வழங்கியவாறே கொள்ளப்படுமென்றது. பிரித்தவழித் தொகைப்பொருள் சிதைதலானன்றே ; கொன்ற யானை என விரிந்த வழியும் அப்பொருள் சிதைவின்றேல் `புணரிய னிலையிடை யுணரத்தோன்றா' என்றற்கொரு காரணமில்லையாம் ; அதனாற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத்தன்மையின் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்தியவழி வினைத்தொகையுளப்பட `இருபெயரொட்டும்' (சொல் - 114) என்றாராகலானும் வினை நின்று தொகுதல் அவர்க்குக் கருத்தன்மையறிக. அஃதேல், வினைத்தொகைக்கு முதனிலை பெயரா மன்றோ வெனின் : - உரிஞென்பது முதலாயினவற்றைத் தொழிற்பெயரென்றாராகலின், தொழில் மாத்திர முணர்த்து வனவெல்லாம் தொழிற்பெயரென்பது ஆசிரியர் கருத்தென்ப. (19) |