மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள் , பிரிநிலை யெச்சம் ஏகாரப்பிரிநிலையும் ஓகாரப்பிரிநிலையுமென இருவகைப்படும் . அவ்விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லோடு முடியும்: எ - று. எ - டு : தானே கொண்டான் ; தானோ கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம் பிறர் கொண்டிலரெனப் பிரிக்கப் பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லான் முடிந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், தானெனப்பட்டானன்றே ஆண்டுப் பிரிக்கப் பட்டான் பிறர் கொண்டிலரென்பது அவனையுணர்த்துஞ் சொல்லன்மையான், அவை பிரிநிலை கொண்டு முடிந்திலவா லெனின்:- அற்றன்று; தானெனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப், பிறகும் அவனிற் பிரிக்கப்பட்டமையான், அவை பிரிநிலை கொண்டனவேயா மென்க. பிரிநிலையோடு முடிதலாவது அவனே கொண்டான் என்றவழி அவனே யென்பது கொண்டானெனப் பிரிக்கப்பட்ட பொருளை வினையெனக் கொண்டு முடிதலென்றாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று; அவனே கொண்டான் என்புழி அவனென்னும் எழுவாய்வேற்றுமை கொண்டானென்னும் பயனிலை கொண்டது; ஏகாரம் பிரிவுணர்த்திற்று. ஆண்டெச்சமும் எச்சத்தை முடிக்குஞ் சொல்லுமின்மையான் அவர்க்கது கருத்தன் றென்க. (35) |