களவியல்

106காமத் திணையிற் கண்நின்று வருஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்1
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.

என்பது மேல் தலைவற்குரிய கிளவி கூறி இனித் தலைவிக்குரிய கிளவி கூறுகின்றாராகலின் முற்பட அவள் தலைவனைக் கண்ணுற்ற வழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

தலைவியிடத்து நிலைமைபெற்று வருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்கமாகலின் , காமவொழுக்கத்தின்கண் குறிப்பினானும் இடத்தினானுமல்லது வேட்கை புலப்பட நிகழாது தலைவியிடத்து என்றவாறு.

காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின் , அதுவும் வேட்கைக் குறிப்பினான் நீங்குமென்ப. அச்சமுள்வழிவேட்கை நிகழாமையின் வேட்கையுள் வழி நாணும் மடனும் நீங்காவோ எனின் , அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப, இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப்பட்டு முன்னிலையாக்கல் முதலாகத் தலைவன்மாட்டு நிகழ்ந்தமைபோலத் தலைவிமாட்டு நிகழ்பவை உளவோவெனின் , அவள் மாட்டுக் குறிப்பினானாதல் , சொல்லுதற்குத் தக்க விடத்தினானாதல் தோற்றுவதல்லது , புலப்பட்டு நிகழாதென்றவாறாயிற்று.

"உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்தல் இன்று"

(குறள்.1090)

என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன்னுளேன் கருதியது.

இடம் பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள்:-

"... ... ... ... ... ... ...
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா2
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்
என்னே3 குறித்த நோக்கமொடு நன்னுதால்4
ஒழிகோ யானென அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன5 நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே".

(அகம். 110)

எனத் தன் குறிப்புக் காலத்தாற் கூறுதலாற்றாது பின் இடம் பெற்றுழிக் கூறியவாறு காண்க.

(18)

1. ஆதலின்.

2. சிதைய.

3. என்னையே.

4. நன்னுதல்.

5. தோறு.