என் - எனின். இது தலைமகட்குந் தோழிக்கு முரியதோர் திறன் உணர்த்திற்று. வருத்தமிகுதியைக் குறித்தவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் உரித்தென்று சொல்லுவர் என்றவாறு. எனவே, வருத்த மிகுதியைச் சுட்டாதவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் இன்றெனக் கொள்ளப்படும். "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை". (குறள். 1151) "அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்1 அவலம் படுதலும் உண்டு." (கலித். 19) இதுவுமோர் மரபுவழு வமைத்தது.(30)
1. முற்றாபையாண்டோர்.
|