உவமையியல்

294பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
முன்ன1 மரபிற் கூறுங் காலைத்
துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே.
என் - னின். இதுவும் ஒருவகை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

பிறிதென்பது - உவமைப்பொருள் தானன்மையான் உவமைப்பொருளொடு படாது பொருள்தோற்றிய இடத்தொடு நோக்கி முன்னமரபினாற்சொல்லுங்காலத்துத் துணிவுடையோர் கொளின் அவர் துணிந்த துணிவின்கண்ணே வரும் உவமை என்றவாறு.

முன்னமாவது

"இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென்
றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்."

(தொல் செய்யு.169)

என்பதாகலின், இடத்தொடு பார்த்து ஏற்கும் பொருட்கட் கூறுவது.

மேலைச்சூத்திரத்தளவும் பிறிதுபொருளொடு உவமைகூறிப் போந்தார். இனிப் பொருள் தன்னோடேயுவமை கூறுகின்றார் என்று கொள்க.

"நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தர."

(கலித். 119)

என்றவழிக் காணப் பிறிதாகிய பொருளொடு உவமை கூறாமையிற் பிறிதொடு படாதாயிற்று. மதியினது எழுச்சியை நோக்குதலிற் பிறப்பொடு நோக்கிற்று. அவ்விடத்திற் கேற்பக் கூறுதலின் முன்னமாயிற்று. அம்மதியினது தோற்றம் இத்தன்மைத்தெனத் துணிதலின் அதன்கண் உவமைச்சொல் வந்தது.

"வள்ளிதழ் கூம்பிய மணிமரு ளிருங்கழிப்
பள்ளியும் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப"

(கலித்.121)
என்பதும் அது.

(23)


1.முன்னை.