செய்யுளியல்

318 குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும்
1ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே.

என்-னின். எய்தியது விலக்கல் நுதலிற்று.

இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனி பசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு.

உம்மை யிறந்தது தழீஇயிற்று.

உதாரணம்

"படுகிளி யாவும் பசுங்குரல் ஏனல்
கடிதின் மறப்பித்தா யாயின் இனிநீ
நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும்."

(கலித். 50)

இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடுவருதலான் நேரசையாயிற்று.

"கண்ணும் படுமோ என்றிசின் யானே."

(நற்றிணை.61)

இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று.

(9)

1. இருவகை உகரமும் ஒற்றெடுத்து உரியசை ஆயின. உம்மை எதிர் மறை ஆகலன் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை.இங்ஙனம் வருமொழி ஒற்றுமிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபும் ஆம் எனவே, 'உண்ணும்' எனவும் 'நடக்கும்' எனவும் நிலைமொழி ஒற்றுநின்றவழித் தேமாவும் புளிமாவும் ஆவதல்லது நேர்பசையும் நிரைபசையும் ஆகாதென்பதாம்.(தொல்.பொருள்.322.பேரா.)