என்-னின் , இது புறநிலைவாழ்த்திற்குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந் தீர்ந்த செல்வத்தொடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்துக் கலிப்பாவகையினும் வஞ்சிப்பா வகையினும் வரப்பெறாது என்றவாறு. எனவே, வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் புணர்ந்த மருட்பாவினும் வரப்பெறும் என்றவாறாம். (104)
1. தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்துதலின் புறநிலை வாழ்த்தாயிற்று. எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய கடவுள் நிற்ப அக்கடவுளால் பயன்பெற நின்றான் ஓர் சாத்தனை முன்னிலையாக்கி அவற்குக் காரியங் கூறுதலின் இது புறநிலையாயிற்று. கலி நிலை வகை என்றதனால் கலி வகைத்தாகிய பரிபாடற்கும் இஃது ஒக்கும். (தொல். பொருள்.422.பேரா.)
|