செய்யுளியல்

458கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும்
போக்கின்1 றாகல் உறழ்கலிக் கியல்பே.
இது உறழ்கலி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உறழ்கலிப்பாவிற்கு இலக்கணங் கூற்று மாற்றமும் விரவிவந்து கரிதகமின்றி முடித லென்றாவாறு.

இதனைக் கொச்சக்ககலியின்பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பினொப் பனஇதற்கு உறுப்பாகக்கொள்ளப்படும்.

உதாரணம்

" யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர்
ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை
வாரல்நீ வந்தாங்கே மாறு;

இது தலைமகள் கூற்று.

என்னிவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
ஆருயிர் நிற்குமா றியாது;

இது தலைவன் கூற்று.

தெளிந்தேம்யாங் காயாதி எல்லாம்வல் எல்லா2
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு
வருந்தல்நின் வஞ்ச முரைத்து;

இது தலைமகள் கூற்று.

மருந்தின்று, மன்னவன் சீறில் தவறுண்டோ நீநயந்த
இன்னகை தீதோ இலேன்;

இது தலைமகன் கூற்று.

மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப்
பொய்ப்ப விடேஎம் எனநெருங்கில் தப்பினேன்.
என்றடி சேர்தலும் உண்டு. "

இப்பாட்டுச் சுரிதகமின்றி வந்தவாறு கண்டுகொள்க.

எற்றிற்கு? இறுதியின்கண் வந்தது சுரிதக மாகாதோவெனின், சுரிதகமாகாது. சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப்பாட்டினுமுள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது இஃது அன்ன தன்றென்க.

(146)

1. 'போக்கின்று' எனவே தரவு பெறுதலும் பாட்டிடை மிடைதலும் ஐஞ்சீரடுக்கலும், ஆறு மெய்பெறுதலும், பாமயங்கிவருதலும், அம்போதரங்கத்திற்கு ஓதிய அளவை பெறுதலும் எல்லாம் வெண்கலிப்பாட்டிற்குப் போல மேனின்ற அதிகாரத்தாற் பெறப்படுவதாயிற்று. (தொல். பொருள், 468. பேரா.)
2. (பாடம்) எடா.