என் - னின். மேலனவற்றுட் சிலபொருட்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. புறநிலை வாழ்த்தும் வாயுறைவாழ்த்துஞ் செவியறிவுறூஉவும் மருட்பாவினால் வரப்பெறும் என்றவாறு. எனவே மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறாதாயிற்று. உதாரணம் வந்தவழிக் காண்க. (151) 1. `திறநிலை மூன்று ' என்றான், முற்கூறியன எல்லாம் அகத்திணையாகலின். இவை புறத்திணையுள்ளல்லது வாரா என்றற்கென்பது. ` திண்ணிதிற்றெரியின் ' என்பது இவை மூன்றும் கைக்கிளை மருட்பாப் போல ஆண்பாற் கைக்கிளையும் பெண்பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒருதலையாகவே புறத்திணையென்று தெரியப்படுவன என்றவாறு. (தொல். பொருள். 473. பேரா.)
|