செய்யுளியல்

486கைக்கிளை முதலா ஏழ்பெருந்1 திணையும்
முற்கிளந் தனவே முறையி2 னான.
என் - னின். நிறுத்தமுறையானே திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

திணையாவது கைக்கிளை முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் பெருந்திணை யென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு.

முறைமையினாற் சொல்லுதலாவது. பாடாண்பாட்டினைக் கைக் கிளைப்புறமெனவும். வஞ்சியை முல்லைப்புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும். உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற்புறமெனவும், காஞ்சியைப் பெருந்திணைப்புறமெனவும், ஓதிய நெறிகொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகியடங்குமாயின்.

(177)

1. (பாடம்) எழுபெருந்.

2.முறைநெறி வகையின்.