இது, கடவுள் மாட்டுவருவதொரு பாடாண் பக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) காமப்பகுதி1 கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள் மாட்டும் வரையார். ஏனோர்பாங்கினும் (வரையார்) என்மனார் புலவர் - ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர். என்றது, கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு. உதாரணம் "நல்கினும்2 நாமிசையாள் நோம்என்னும் சேவடிமேல் ஒல்கினும் உச்சியாள் நோம்என்னும் - மல்கிருள் ஆடல் அயர்ந்தாற்கு3 அரிதால் உமையாளை ஊடல் உணர்த்துவதோர் ஆறு." (புறப்.பாடாண். 48) இது தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம்."அரிகொண்ட கண்சிவப்ப அல்லினென் ஆகம் புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு பண்நலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூர்என் உண்ணலங் கூட்டுண்டா னூர்." (புறப்.பாடாண். 49)) இது மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்.(23)
1. பகுதி ஆகுபெயர். அது கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம் (தொல்.புறம். 28) (நச்சி.) (பாடம்) 2. நல்கெனின். 3. அமர்ந்தாற்கு.
|