இத்துணையும் பாலைக்குரித்தாகிய பிரிவிலக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருந்திணைக்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எ திணை மருங்கினும் - எல்லாக் குலத்தினிடத்தினும், மகடூஉ மடல்மேல் (இல்லை) - பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை நெறிமை இன்மையான - பொலிவுபெறு நெறிமை இல்லாமையான். 'மடன்மேல்' என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது. இல்லை என்பது மேலைச் சூத்திரத்தினின்று தந்துரைக்கப்பட்டது. 'பொற்புடை நெறிமை' என்பது பெண்பாற்கு இன்றியமையாத நாணம் முதலாயின. மகடூஉ மடலேறுதல் இல்லை எனவே ஆடூஉ மடலேறுதல் உண்டு என்பது பெற்றாம். இது, "புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும்," "தேறுதலொழிந்த காமத்து மிகுதிறன்" (அகத். 51) ஆகிய பெருந்திணைக்கும் உரித்தாகியவாறு கண்டுகொள்க. [ஈற்றகரம்சாரியை] (38)
1.எத்திணை மருங்கினும் - கைக்கிளை முதற் பெருந்திணை இறுவாய் ஏழன்கண்ணும் (நச்சி.) |