நூ. 93: "இன்பமும் பொருளும்" என்ற நூற்பாவுக்கு வரையப்பட்டுள்ள பதசாரம் பயனும் சுவையும் ஒருங்குநல்குவது. திருமணமன்றல், கடிமணமன்றல், முறைமணமன்றல், தெய்வ மணமன்றல், அருமணமன்றல், பெருமணமன்றல், சிறுமணமன்றல் என்று மணங்களை எண்வகையாகப் பகுத்து விளக்கியிருக்குந் திறன் உரையாளரின் நுண்மாண் நுழைபுலம், புதுமை வேட்டல் என்பனவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். |
தொல்காப்பியனார் காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்டவரான இறையனார் அகப்பொருளாசிரியர் முதலிய சான்றோர் பலரும் குறிப்பிடும் அறநிலை ஒப்பு, முதலிய எண்வகை மணங்களும் இன்று வேதநூலில் காணப்படவில்லை யாயினும் வேதங்களைச் சிறிதும் வழுவாமல் அவற்றைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளனவும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டனவுமாகிய மிருதி எனப்படும் அற நூல்களில் காணப்படுவனவே. உலகில் நிகழும் நல்லவும் தீயவும் ஆகிய மன்றல்கள் எல்லாவற்றையும், அவை தக்காரும் தகாருமாகிய மக்களிடையே நிகழ்தலான் எஞ்சாமல் கூறவேண்டிய தேவை மிருதி நூல்களுக்கு உண்டு. மக்கள் ஒழுகலாறுபற்றிப் படைக்கப்படும் செய்யுள் நெறிக்கண் நல்லனவற்றையும் சுவையுடையனவற்றையும் பொறுக்கி எடுத்து அமைத்துள்ள விதிகள் பற்றிய பொருட்படலத்தில் அறநெறிக்கு ஒத்தனவே விளக்கிக் கூறப்படுதலின் இதன்கண் கந்தருவத்தோடு ஒத்த சுவையுடைய களவின் வழிவந்த மன்றலே விளக்கிக் கூறப்பட ஏனைய இராக்கதம், பேய்நிலை போன்ற மன்றல்கள் விளக்கிக் கூற வேண்டிய தேவை எழவில்லை. |