நச்சினார்க்கினியர் வியாசரால் இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்று வேதங்கள் பகுக்கப்படுவதன்முன் அவை தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமவேதம் என்ற பெயர்களில் விளங்கின என்று குறிப்பிடும் செய்தி வேதம் வல்லார் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாவ்யருச்சம் என்ற இருக்குவேதப் பெயரின் தற்பவம் பௌடிகம். தலவகாரம் என்பது சாமவேதத்தின் ஒருகூறு. தென்திருப்பேரை எம்பெருமான்மீது மகரநெடுங்குழைக் காதர் பாமாலையை இயற்றிய நாராயண தீட்சிதர் தலவகார சாமவேதி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியிலும் சந்தோகா, பௌழியா, தைத்திரியா, சாம வேதியனே, நெடுமாலே (7-7-3) என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள் வழங்குகின்றன. இராமனை முதன்முறை கண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன் கூற்றினைச் செவிமடுத்த இராமன் இவன் இருக்கு, எசுர், சாமவேதம் என்ற வேதங்களில் பயிற்சியுடையனாதல் வேண்டும். அதனால்தான் இவன் பேச்சு வணக்கமும் தொடர்ச்சியும் இனிமையும் உடையதாய் உள்ளது என்று இலக்குவனிடம் குறிப்பிட்டதாக வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன. எனவே பிற்பட்ட வியாசர் வேதங்களைப் பகுத்தற்கு முன் அவை வேறு பெயர்களில் வழங்கின என்று கருதி நச்சினார்க்கினியர் குறிப்பிடும் செய்தியும், அவர் பண்டு வேதங்களுக்கு வழங்கினவாகக் குறிப்பிடும் பெயர்களும் பொருந்துவனவாக இல்லை. இறையனார் அகப்பொருள் காலத்திற்கு முன்பே அருமறை மன்றல் எட்டு என்று கற்றோரால் கொள்ளப்பட்ட எண் மணங்களையே ஆசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். நான்மறைக்கு நான்கு வேதங்கள் என்ற கருத்தை விடுத்து வேற்றுக் கருத்து ஒன்றனைக் குறிப்பிட்டுள்ள இவ்வுரையாளர் மறையோர் தேஎத்து மன்றல் எட்டுக்குப் புதிய விளக்கந்தர முயன்றமை பாராட்டத்தக்கது. நான்மறை பற்றிய செய்தியே ஊகத்தளவில் கருத்துப் பொருளாகி விட்ட இக்காலத்தில் அந்த நான்மறை மன்றல்களும் ஊகத்தாலேயே கொள்ளப்படுவனவாய் உள்ளன. |