களவியல்75

நாள்வேங்கை பொன்சொரியும் நன்மலை நன்னாட

கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார் -

கோள்வேங்கை

அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்

கென்னையோ நாளை எளிது

(திணை - நூற் - 20)
 

இது கையுறை மறுத்துப்பின் வா என்றது.
 

6) பேதைமை  யூட்டலும்  என்பது  :   அங்ஙனங்  கூறிய  பின்னரும்
தலைவன் அகலாது   நிற்றலை  நோக்கி நின் குறையை யான்கூற நேரினும்
அதனையறியும் முதுக்குறை யுடையாளல்லள் எனத் தலைவிக்குப் பேதைமை
ஏற்றிக் கூறலும் என்றவாறு.
 

(முதுக்குறை = அறிவுமுதிர்ச்சி) பேதைமையூட்டலும் எனப் பொதுப்படக்
கூறியமையான் தலைவற்குப் பேதைமை ஏற்றிக் கூறலும் கொள்க.
 

எ - டு :

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை

வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி-எறிந்துழுது

செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு

நொந்தினைய வல்லளோ நோக்கு

(திணை-நூற்-24)
 

"புன்தலை மந்திக் கல்லா வன்பறழ்" என்னும் நற்றிணைச் (379)  செய்யுளும்
அது  :   தலைவற்குப்    பேதைமையூட்டியதற்கு   இலக்கியம் வந்தவழிக்
கண்டுகொள்க.   இதற்கு  நச்சினார்க்கினியர்  காட்டும் எடுத்துக்காட்டுக்கள்
இருவரும்   உள்வழி   அவன்  வர  உணர்தல்   என்பதற்குரியவாகலின்
ஈண்டைக்கு ஏலாமையறிக.
 

7) முன்னுறு   புணர்ச்சி   முறை   நிறுத்துரைத்தலும் என்பது : பாலது
ஆணையாற்   கூடியாங்குப்   பின்னும் அவ்விதி கூட்டுவிக்கக் கூடுக என,
முன்னர்ப்புணர்ந்த   முறைமையினை   எடுத்துக்காட்டிக் கூறுதற் கண்ணும்
என்றவாறு.
 

எ - டு :

வந்துழிக் கண்டுகொள்க.
 

இதற்கு    நச்சினார்க்கினியர்    கூறும்     விளக்கம்    இத்தொடர்
மொழியமைப்பிற்கு ஏலாமல் இயைபின்றி நிற்றலையறிக.
 

8) அஞ்சி   யச்சுறுத்தலும்   என்பது :  தன்னாற் குறை முடியாமையை
அறியும்   தலைவன்  பிறவாறு முயலுங்கொல் என அஞ்சித் தலைவி புறம்
போந்து  விளையாடாமைக்குக்  காரணம் அவள்தம் குரவரையும் தமரையும்
அஞ்சுதலே   எனத்தலைவிக்கு  அச்சத்தை  ஏற்றிக்     கூறுதற்கண்ணும்
என்றவாறு.