என்பது : தலைவனது குறைநயப்பப் புக்குழித்தலைவி தன் மன ஓட்டத்தை மறைத்து இசைவில்லாதாள் போல அரியளாய் நின்றவிடத்து, முற்பட நிகழ்ந்த இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் ஆகிய மூன்றனையும் தன்னொடும் அவளொடும் அளாவி இரந்து குறைநயப்பித்தல் பல்வேறு பட நிகழுமிடத்தும் என்றவாறு. |
தலைவி தன் உணர்ச்சிகளைப் புலப்படுத்தாது நிற்றலின் 'மறைத்து' என்றும் குறையை நயவாதாள் போல நிற்றலின் 'அருக' என்றும் கூறினார். தன்னொடும் என்றது தனது நெஞ்சொடும் என்றவாறு. அளைஇ = அளவளாவி. அளவுதல் - கலந்து பேசுதல். பல்வேறு நிகழும் குறைநயப்பித்தலாவது : பிறரினும் பெருமை மிக்கா னொருவன் கண்ணியும், தழையும் கையுறையாக ஏந்தி நம்புனத்தின்பால் வாரா நின்றான் எனவும் என்பால் குறையிரந்து ஒழுகுவானாயினன் எனவும் அருள்புரிதற்கு இஃதிடம் எனவும் அவன் தரும் கையுறையை ஏற்றல் தகும் எனவும் நினக்குச் செறிந்தாரிடம் உசாவி நின் குறைமுடிப்பாயாக எனவும் அத்தகையானுக்கு அருளாது அவன் குறையை மறுப்பின் மடலேறுவான் எனவும் வரைபாய்வான் எனவும் ஏற்பன பிறவும் கூறி நயப்பித்தலாம். |
| எ-டு : | புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் சாரல் |
| தினைகாத் திருந்தேம்யாமாக - வினைவாய்த்து |
| மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் |
| தாம்வின வலுற்றதொன் றுண்டு |
(ஐந்-ஐம்-14) |
| கைதையந் தண்கானல் காலையும் மாலையும் |
| எய்த வரினும் இதுவென் குறையென்னான் |
| செய்தழையும் கண்ணியும் சேர்ந்துழி வைத்திறந்தான் |
| உய்யலன் கொல்லோ உணரலனே என்றியால் |
(நச்-மேற்) |
"ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்" (குறு-176) என்னும் குறுந்தொகையும் "சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா" (நற் - 359) என்னும் நற்றிணையும் அவ்வளை வெரிநின் அரக்கீர்த் தன்ன (நற் - 25) என்னும் நற்றிணையும் கொள்க. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. |
13) நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் என்பது : அங்ஙனம் தோழி கூறிய குறையினை நயந்து தலைவி உடன் |