| மன்னேர்மன் சாய லவருள் மருள்தீர |
| இன்னார்கண் என்ப தறியேன்நான் - மின்னூரும் |
| கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட |
| யார்கண்ண தாகுங் குறை |
(நச்-மேற்) |
| விருந்தின ராதலின் வினவுதிர் அதனெதிர் |
| திருந்துமொழி மாற்றந் தருதலும் இயல்பெனக் |
| கூறுவ தம்மயான் ஊறுபல வருமென |
| அஞ்சுவன் வாழி அறைய எஞ்சாது |
| எண்ணிலர் எண்ணியது முடிப்பர் |
| கண்ணிலர் கொடியரிவள் தன்னை மாரே |
(நச்-மேற்) |
பிறவும் சான்றோர் இலக்கியங்களுட் கண்டு கொள்க. |
14) எண்ணரும் பன்னகைக் கண்ணிய வகையினும் என்பது : இக்களவொழுக்கம் ஆயத்தார்க்கும் அயலார்க்கும் புலனாயின் பல்லோரது நகைப்பிற் கிடனாகும் எனக்கருதிய வகையான் தலைவனிடத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு. நகைத்தல் என்பதன் கருத்து அலராகும் என்பதாம். |
| எ - டு : | நிறையரியர் மன்னெளியர் என்னாது காமம் |
| மறையிறந்து மன்று படும் |
(குறள்-1138) |
| அன்னையு மறிந்தனள் அலருமா யின்று |
| நன்மனை நெடுநகர் புலம்புகொள உயிர்க்கும் |
| இன்னா வாடையும் மலையும் |
| நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ |
(ஐங்-236) |
இனி, இதற்குத் தலைவன் எளி வந்தொழுகுதலைப் பொறாத தோழி அவனது இளிவரவினையுணர்த்தும் கருத்தினளாய் செயற்கையாக ஆராய்தற்கரியதாய் வரும் ஒன்றல்லாப் பலநகை குறித்த பகுதிக்கண் என உரை கூறி, அவை என்னை மறைத்தல் எவனாகியர் என்றலும் பிறவுமாக வருதல் என்பார் நச்சினார்க்கினியர். அவர் கூற்று வலிந்துரையாதல் காணலாம். ஆசிரியர் கருத்து அதுவாயின் "நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்" என்னும் கிளவிக்கு முன்னர் இதனை வைத்துக் கூறியிருப்பார். என்னை? நயம் புரிந்தபின் எள்ளி நகைத்தல் இயையாமையான் என்க. |
15) புணர்ச்சி வேண்டினும் என்பது : அங்ஙனம் கூறிய வழியும் தலைவன் வேட்கையான் கூட்டத்தை வேண்டுமிடத்தும் என்றவாறு. அவ்வழித் தலைவிக்குப் பகற்குறியும் இரவுக்குறியும் நயப்பித்தல் இதனானே கொள்ளப்படும். |