களவியல்83

இங்ஙனம்  பகற்குறி,  இரவுக்குறி  பற்றி  வருவனவெல்லாம் இதன்கண்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.
 

16) வேண்டாப்   பிரிவினும் என்பது :   தலைவன்   தன் உள்ளத்தால்
விரும்பாது   கடமை   பற்றிப்   பிரிதலைக்  கூறிய விடத்தும் என்றவாறு.
அஃதாவது    ஒருவழித்தணத்தலும்,   துணைவயிற்சேறலும்     காவற்குப்
பிரிதலுமாம்.   தலைவன்  இவற்றை    விரும்பிப்      பிரிதலின்மையான்
"வேண்டாப்   பிரிவினும்" என்றார்.   இது   தலைவன்  கூற்றுள்  இட்டுப்
பிரிவிரங்கினும் என ஓதப்பட்டது.
 

எ - டு :

இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல் 

சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை 

பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புதிர்பு 

நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி 

விழவுக் களங்கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப 

இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் 

செலீஇய சேறி யாயின் இவளே 

வருவை யாகிய சின்னாள் 

வாழ்வா ளாதல் அறிந்தனை சென்மே 

(நற்-19)
 

சாரற்பலவின் (ஐங்-214) என்னும் ஐங்குறுநூறும் அது.
 

17) வேளாண் பெருநெறி   வேண்டிய விடத்தும்     என்பது : தலைவி
விருந்தோம்புதலாகிய   பேரொழுக்கத்தை விரும்பிய காலையும் என்றவாறு.
இது "வேளாண் எதிரும் விருப்பினானும்" எனத்தலைவி கூற்றுள் ஓதப்பட்ட கிளவியைச் சார்ந்தாகும்.
 

எ - டு :

'நிலாவினிலங்கும்' என்னும் அகப்பாட்டினுள் 

சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் 

எம்வரை அளவையிற் பெட்குவம் 

நும்மொப் பதுவோ மேவரிது எமக்கே

(அகம்-200)
 

என   வந்தவாறு   கண்டுகொள்க. "நெடுவேள்   மார்பின்"   என்னும்
அகப்பாட்டும், "பன்னாளெவ்வந்தீர" என்னும் அகப்பாட்டும் அது.
 

18)  புணர்ந்துழி    யுணர்ந்த     அறிமடச்     சிறப்பினும் என்பது :
தலைவியைக்    குறியிடத்து   உய்த்து     நீங்கி      நின்ற     தோழி
கூட்டத்தின்     பின்   மீண்டு   வரும்   தலைவனது       கூட்டத்தை
உணர்ந்தவளாயினும்  அறியாதாள்     போலச்     சிறந்தொழுகுமிடத்தும்
என்றவாறு.