மிகைபடக்கூறல் முதலிய   சிதைவுகளைப்   புணர்த்துக்கூறும்   செய்தி
ஆராயத்தக்கது.   இக்களவு      சிலப்பதிகாரக்    குன்றக்   குரவையுள்
நன்மணத்துக்கு மறுதலையாய பிழைமணம்    என்று   கூறப்பட்டிருப்பதும்
பண்டைய     உரையாசிரியர்தரும்        விளக்கங்களின்    தேவையை
வலியுறுத்துவதாகும்.
 

நூ. 94 : ஒன்றே, வேறே  ஒன்றுபடுத்துவது   வேறுபடுத்துவது   என்ற
இளம்பூரணர்   உரையைத்தழுவி     அத்தொடருக்குக்     கூடியிருத்தல்,
பிரிந்திருத்தல்    என்று     பொருள்கூறி    விளக்கமும்    தந்துள்ளார்.
பால்வயின் ஒன்றி - உயர்ந்த பாலது ஆணையின், என்று பகுத்துப்பொருள்
கூறியது தாம்பொருள் கொண்ட,   கூடியிருத்தல்   பிரிந்திருத்தல்   என்ற
செய்திக்கு அரணாகுமாறு அமைந்துள்ளது.
 

ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும்
என்று பொருள்கூறித்  தேவையான   விளக்கந்தந்து   எடுத்துக்காட்டுக்கள்
பலவற்றைப் பொருத்திக் காட்டிய நேர்உரை  ஆசிரியர்  நச்சினார்க்கினியர்
உரை நூல் நெறிக்கு  ஒவ்வுமாறில்லை   என்ற   இவ்வுரைகாரர்   கருத்து
ஆராயத்தக்கது. அகத்திணைச் செய்திகளை  வடநூலார்  புணர்தல், பிரிதல்
என்ற இரண்டனுள் அடக்கத்  தமிழ்   நூலார்   ஐவகையாகப்   பகுத்துக்
கொண்ட செய்தி ஈண்டு உளங்கொளத்தக்கது.
 

நூ. 95 : ஒத்த கிழவனும்  கிழத்தியும்   என்று   புலனெறி   வழக்கிற்
கொள்ளப்பட்ட தலைவனும்   தலைவியும்   உருவினும் திருவினும் மிக்கார்
என்பது அகப்பொருளின் அடிப்படைச் செய்தி.  அங்ஙனமாகவும்  தலைவி
உருவானும் சிறந்த இடத்திலேயே ஐயம்   நிகழும்   என்று   கூறப்படுவது
தேவையா?   தலைவி  இவற்றால்  சிறவாதவழிப்   பொருவிறந்ததலைவன்
காட்சியையும் விரும்பான் ஏனையவற்றிற்கு இடமே   இன்று.   ஐயக்கிளவி
ஆடூஉவிற் குரித்தே என்று பின்னர்க் கூறுவதற்கு அரண்செய்யும் வகையில்
அமைந்த   நச்சினார்க்கினியர்     உரைப்பொருத்தத்தை   இவ்வுரைகாரர்
ஏலாததன் காரணம் புலப்படவில்லை.
 

நூ. 96 : நின்ற ஐ  களையும் - ஆசிரியர்   ஐ என்ற   ஓரெழுத்தொரு
மொழியை   ஐயத்தைக்குறிக்கும் சொல்லாக யாண்டும் பயன்படுத்தவில்லை.
எனவே இளம்பூரணரை ஒட்டி ஐயம் அதிகாரத்தால் வருவிக்கப் பட்டதாகக்
கோடலே நேரிது.
 

நூ. 98 : 'ஆங்கவை   நிகழும்'   என்ற    தொடருக்குக் களவிற்குரிய
ஒழுகலாறுகள் நிகழும் என்ற பொருள் நேரிதும் சிறப்பானதுமாகும்.