84களவியல்

தலைவன் பெருமையானும் தலைவி  நாணத்தானும் குன்றா வகை நாடிப்
பெட்புறப்    பேசுதலின் "அறிமடச்    சிறப்பு"   எனப்பட்டது.   பின்னர்
ஓம்படை கூறற்கு  இவ் அறிமடம்   சார்பாகும் என்க.   எ-டு.   வந்துழிக்
கண்டு கொள்க.
 

19) ஓம்படைக்   கிளவி   பாங்கின்  கண்ணும் என்பது : தலைவியைப்
பேணிக்   காத்துக்கொள்க   என்னும்   கிளவியது  பகுதிக்     கண்ணும்
என்றவாறு.
 

குறியிடத்து  எய்திப்பின்     பிரிந்து      செல்லுமிடத்தும்,    அல்ல
குறிப்பட்டுச்      செல்லுமிடத்தும்     வரை    பொருள்       கருதிப்
பிரியுமிடத்தும்,  ஏற்புடைய   பிறவிடத்தும்.    தன்     பொறுப்புணர்ந்து
கூறுவாளாதலின் பாங்கின் கண்ணும் என்றார். பாங்கு =  பகுதி.
 

எ - டு :

நனைமுதிர் ஞாழல் தினைமருள் திரள்வீ

நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல 

ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப 

தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு 

அன்னாய் என்னும் குழவி போல 

இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் 

நின்வரைப் பினள்என் தோழி 

தன்னுறு விழுமம் களைஞரோ விலளே  

(குறு-397)
 

20)   செங்கடுமொழியாற்   சிதைவுடைத்தாயினும்     என்பு    நெகப்
பிரிந்தோள்  வழிச்சென்று    கடைஇ   அன்புதலையடுத்த    வன்புறைக்
கண்ணும் என்பது : செம்மை கூர்ந்த     கடுமொழியான்  தலைவன்பழியை
ஏற்றிக் கூறுதல்   குற்றேவல்    தன்மைக்குக்     குறைபாடுடையதாயினும்
என்பும் நெகிழுமாறு    தலைவனாற்    பிரியப்பட்ட    தலைவியின் வழி
ஒழுகித் தன்   கருத்தினை   அவன் மனத்தே செலுத்தி அன்பொடு கூடிய
சொற்களான் வற்புறுத்துமிடத்தும் என்றவாறு.
 

அஃதாவது தலைவன் வரைதலை மேற்கொள்ளாமல் களவினை நீட்டித்த
வழித்,   தலைவியை    ஆற்றுவித்தற்       பயனாகத்      தலைவனை
இயற்பழித்துரைத்தலாம்.   தனது   குற்றேவல்  முறைமைக்கு இழுக்கின்றிக்
கூறுதலின் 'செங்கடு மொழி' எனவும் அஃது அவன் பெருமைப்  பண்பிற்கு
இழுக்காதலின் 'சிதைவுடைத்தாயினும்'   எனவும்  தலைவியது உணர்வினை
ஓராற்றான்     உணர்ந்துரைத்தலின்    'வழிச்சென்று   கடைஇ'  எனவும்
பற்றுள்ளம்     தோன்றக்   கூறலின் 'அன்பு    தலையடுத்த'    எனவும்
கூறினார். இதன்   பயன்   தலைவியை   ஆற்றுவித்தல்  என்பது விளங்க
வன்புறை என்றார்.