களவியல்89

சுடரின்று தமியளாய்ப் பனிக்கும், வெருவர 

மன்ற மராத்த கூகை குழறினும் 

நெஞ்சழிந் தரணம் சேரும் அதன்றலைப் 

புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு 

முருகின் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் 

எந்தையும் இல்லா னாக 

அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே  

(அகம்-158)
 

இதன்கண்   தலைவியை  ஐயுற்ற தாயினைக் கனவு மருட்டலும் உண்டு
என்றது முதலாகப்  பொய்யென   மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக்
கொடுத்தமை காண்க.
 

26) அவள்  விலங்குறினும் என்பது :   தலைவி [காப்பு   மிகுதியானும்
நொதுமலர் வரைவு   வேண்டுதலைக் கேட்டலானும்,   தலைவற்குத்  தமர்
வரைவு மறுத்தலானும்]  நிலை  வேறுபட்டவழிச்   செவிலி  இவட்கு இஃது
ஏற்றினா னாயது எனத்   தெரியக்,   கட்டுங்  கழங்கும்  பிறவுமாகிய குறி
பார்த்தலைச் செய்யுமிடத்தும் என்றவாறு.
 

அவள்  என்றது  செவிலியை.   விலங்குறுதல்   என்றது  தலைவியின்
ஒழுகலாறு நோக்கித் தான் கருத்து மாறுபடுதலை.
 

எ - டு :

பொய்படு பறியாக் கழங்கே, மெய்யே 

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம் 

மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன் 

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள் 

பூண்டாங் கிளமுலை அணங்கி யோனே  

(ஐங்-250)
 

இது கழங்கு   பார்த்துழிக்    கூறியது.   பிறவும்    வந்தவழிக் கண்டு
கொள்க.
 

27) களம்பெறக்  காட்டினும்  என்பது : செவிலி அறிவரை வினாவி இது
தெய்வத்தானாயது     எனக்     கருதியவழிச்     செவிலி  வெறியாட்டு
நிகழ்த்துவான்   வேண்டிக்   களத்தைப்பெற,   அவ்வழித்    தலைவியது
நிலைமையைத் தாயர் உணருமாறு தக்க  சொற்களாற்    காட்டுதற்கண்ணும்
என்றவாறு.
 

எ - டு :

கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி 

அறியா வேலன் வெறியெனக் கூறும்

அதுமனங் கொள்குவை அனைஇவள் 

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே  

(ஐங்-243)
 

இது தாய்க்கு உரையாற் காட்டியது.