| அம்ம வாழி தோழி பன்மலர் |
| | நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை |
| குன்றம் பாடா னாயின் |
| என்பயம் செய்யுமோ வேலற்கு வெறியே |
| (ஐங்-244) |
இது தலைவிக்கு உரைப்பாள் போன்று வேலன் மேல் வைத்துக் கூறிக் காட்டியது. |
| நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் |
| கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் |
| அருந்திறற் கடவுள் அல்லன் |
| பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே. |
| (ஐங்-182) |
இது வேலற்குக் கூறிக் காட்டியது. |
| கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த |
| பறியாக் குவளை மலரொடு காந்தட் |
| குருதி யொண்பூ உருகெழக் கட்டிப் |
| பெருவரை யடுக்கம் பொற்பக் குறமகள் |
| அருவி இன்னியத் தாடும் நாடன் |
| மார்புதர வந்த படர்மலி யருநோய் |
| நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து |
| கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி |
| வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் |
| கடவு ளாயினும் ஆக |
| மடவை மன்ற வாழிய முருகே |
| (நற்-34) |
இது முருகற்குக் கூறிக் காட்டியது. |
28) பிறன் வரைவு ஆயினும் என்பது : நொதுமலர் வரைவு வேண்டியவழித் தமர் அதனை ஆராய முற்பட்ட விடத்தும் என்றவாறு. |
| எ - டு : | இன்றுயாண் டையனோ தோழி குன்றத்துப் |
| பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் |
| கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன் |
| அறிவுகாழ்க் கொள்ளு மளவைச், செறிதொடி |
| எம்மில் வருகுவை நீயெனப் |
| பொம்மல் ஓதி நீவி யோனே |
| (குறு-379) |
இது தாய் கேட்பத் தலைவியிடத்துக் கூறியது. |
29) அவன் வரைவு மறுப்பினும் என்பது : தலைவன் தமர் வரைவு வேண்டிய வழித் தலைவியின் தமர் அதனை மறுத்தவிடத்தும் என்றவாறு. |