| எ - டு : | குன்றக் குறவன் காதல் மடமகள் |
| அணிமயி லன்ன அசைநடைக் கொடிச்சியைப் |
| பெருவரை நாடன் வரையு மாயின் |
| கொடுத்தன மாயினோ நன்றே |
| இன்னும் ஆனாது நன்னுதல் துயரே |
| (ஐங்-252) |
இது செவிலியிடங் கூறியது. இஃது அறத்தொடு நிற்றற் பகுதியாகும். |
30) முன்னிலை அறனெனப் படுதல்என்று இருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் என்பது : அவள் விலங்குறுதல் முதலாய மூன்று கிளவிகளும் பற்றிக் கூற்று நிகழ்த்துங்கால், முன்னிலை, அறத்தொடுநிலை என்று கூறப்படும் இருவகையாய, குற்றந்தீர்ந்த மொழிகளான் கள வொழுக்கத்தினைத் தாயினிடத்தே உணர்த்தற்கண்ணும் என்றவாறு. அஃதாவது மேற்கூறிய மூன்று கிளவிகளான் தலைவியது களவொழுக்கத்தை அவளது குடிமைக்கும் குலத்திற்கும் மாசு நேரா வண்ணம் தாயர்க்குப் புலப்படுத்தும் என்றவாறு. வகை என்றதனான் முன்னிலையாற் கூறலேயன்றி முன்னிலைப் புறமொழியானும், எளித்தல், ஏத்தல் முதலாய எழுவகையானும் உணர்த்துமெனக் கொள்க. |
செவிலி உளங்கொளக் கூறுதலின் உரைத்தல் என்னாது புகுத்தல் என்றார். அதனான் செவிலி அவற்றை நற்றாய்க்கு உணர்த்தலும் கொள்க. மற்றும் புனலாடிய வழியும், பூக்கொய்த வழியும், சாரல்புக்கு மீண்ட வழியும் நிகழ்ந்தனவாகத் தோழி படைத்துக் கூறி அறத்தொடு நிற்றலும் கொள்க. |
| எ - டு : | "காமர் கடும்புனல்" என்னும் குறிஞ்சிக்கலியுள் | (39) |
| அவனுந்தான், ஏனலிதணத்த கிற்புகையுண் டியங்கும் |
| வானூர் மதியம் வரை சேரின் அவ்வரைத் |
| தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் |
| கானக நாடன் மகன் ..... ....... |
| ..... ..... ..... ...... ..... ....... ...... ..... |
| எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக்கண்டு திறப்பட |
| என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய். |
என வந்தவாறு கண்டு கொள்க. |
| அன்னாய் வாழிவேண் டன்னை, என்னை |
| தானும் மலைந்தான் எமக்குந் தழையாயின |
| பொன்வீ மணியரும் பினவே |
| என்ன மரங்கொல் அவர்சாரலவ்வே |
| (ஐங்-201) |
இது பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நின்றது. |