| எ - டு : | சுள்ளி சுனைநீலம் சோமாலிகை செயலை |
| அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி |
| இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை |
| உதணாற் கடிந்தான் உளன். |
| (திணை-நூற்-2) |
இது களிறுதருபுணர்ச்சியான் அறத்தொடு நின்றது. |
| வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில் |
| நல்லார் விழவகத்தும் நாம்காணேம்-நல்லாய் |
| உவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனொ டொப்பார் |
| சுவர்க்கத் துளராயிற் சூழ் |
| (திணை-நூற்-62) |
இது பிறவாறு அறத்தொடு நின்றது. இங்ஙனம் அறத்தொடு நிலை தோன்ற வருவனவற்றையெல்லாம் இதன்கண் அடக்கிக் கொள்க. இவை யாவும் 'எளித்தல் ஏத்தல்' முதலாயன எழு வகையுள் அடங்குமாற்றைப் பொருளியலுரையுள் கண்டுகொள்க. |
31) வரைவுடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும் என்பது : தமர் ஒப்பிய வழி வரைதற்கு உடன்பட்ட தலைவனை நீட்டியாது விரைந்து புரிக எனக் கடாவுதலை விரும்பியவிடத்தும் என்றவாறு. |
எ - டு : | வந்துழிக் கண்டு கொள்க. கலி-138 ஒருபுடை ஒக்கும். |
32) ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையினும் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன என்பது : அங்ஙனம் வரைவுகடாய அவ்வியல்பானே வதுவை நிகழும் வரை ஆற்றியிருப்பாயாக எனத் தலைவியை வற்புறுத்துக் கூறும் கிளவி உட்படச் செம்மையுறக் கூறப்பெற்ற முப்பத்திரண்டு கிளவிகளும் தடுத்தற்கரிய சிறப்பினையுடைய தோழியிடத்தனவாம் என்றவாறு. |
| எ - டு : | உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் |
| அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை |
| பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் |
| பல்பூங் கானற் பகற்குறி வந்துநம் |
| மெய்கவின் சிதையப் பெயர்த்தன னாயினும் |
| குன்றிற் றோன்றுங் குவவுமணல் ஏறிக் |
| கண்டனம் வருகம் சென்மோ தோழி |
| தண்டா ரகலம் வண்டிமிர் பூதப் |
| படுமணிக் கலிமாக் கடைஇ |
| நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே |
| (நற் - 235) |
இது தலைவன் வரைய வருகின்றமை கூறி வற்புறுத்தியது. |