களவியல்105
சூ. 129 : 

குறையுற உணர்தல் முன்னுற உணர்தல் 

இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என 

மதியுடம் படுதல் ஒருமூ வகைத்தே  

(37)
 
க - து :

தோழியது   சூழ்ச்சி   அதிகாரப்பட்டமையான்  களவின்கண்
அவள் சூழும் வகையாமாறு கூறுகின்றது.
 

பொருள் : தலைவன்   தன்பால்   வந்து   இரந்து   குறையுறுதலான்
களவொழுக்கத்தை  உணர்தலும் தலைவியது உரு ஒழுக்கங்களான் புணர்ச்சி
உண்மையை  முன்னத்தான்  உணர்தலும் தலைவியொடு தான் ஒருங்கிருந்த
செவ்விக்கண்  தலைவன்  வர  ஆண்டு நிகழும் இருவரது நிலைமைகளான்
இருவர்க்கும்  உறவுண்மை உணர்தலும் என நூலோரான் கூறப்படும் பாங்கி
மதியுடம்படுதல் ஒருமூன்று வகையினை உடையதாகும்.
 

முன்னம்  என்பது  கடைக்குறைந்து  'முன்'   என  நின்றது.  இருவர்
மதியொடு  தனது  மதியும்  ஒத்துச்  சேறலின்  மதியுடம்பாடு  என   ஓர்
இலக்கணக் குறியீடாக நின்றது. மதி  என்றது   சிந்தையையும்  அறிவையும்
ஒருங்குணர்த்தி நின்றது.     தொடைநயங்கருதிக்           குறையுறுதல்
முன்வைக்கப்பட்டது.
  

சூ. 130 :

அன்ன வகையான் உணர்ந்தபின் னல்லது 

பின்னிலை முயற்சி பெறாள்என மொழிப  

(38)
 

க - து :  

இதுவுமது.
 

பொருள் :   மேற்கூறிய           முறைமையானே     இருவரது
மறையொழுக்கத்தினை   நன்கு  உணர்ந்த பின்னன்றித் தலைவன் தன்பால்
வந்து இரந்து பின்னின்ற குறையை முடித்தற்பொருட்டுத் தலைவியை இரந்து
குறைநயப்புறுத்தும் முயற்சியைத் தோழி  மேற்கொள்ளாள்  எனக்  கூறுவர்
நூலோர்.
 

சூ. 131 : 

முயற்சிக் காலத்து அதர்ப்பட நாடிப் 

புணர்த்த லாற்றலும் அவள்வயி னான  

(39)
 
க - து : 

தோழி   இருவரையும்   கூட்டுவித்தலைச்   செய்யும்   மரபு
கூறுகின்றது.
  

பொருள் : தலைவற்குக்  குறையை  நேர்ந்து   தலைவியைக்    குறை
நயப்பிக்கும் காலத்து எவ்வாற்றானும் பிழைபடாத நெறிமுறையை ஆராய்ந்து
அவ்விருவரையும்     கூட்டுவித்தலைப்      புரிதலும்   தோழியிடத்தான
கடப்பாடாகும். அதர் = நெறி.