பொருளதிகாரம் |
நான்காவது கற்பியல் |
பாயிரம் : 'வெளிப்பட வரைதல்' எனக் களவியலுட் கூறிய வரைதலொடு நிகழும் கற்பொழுக்கமாகிய கைகோள் பற்றிய இலக்கண மரபுகளை விரித்துக் கூறலின் இது கற்பியல் எனப் பெயர்பெற்றது. அஃதாவது, |
| மறைவெளிப் படுத்தலும் தமரிற் பெறுதலும் |
| இவைமுத லாகிய இயல்நெறி திரியாது |
| மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் |
| பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே |
(செய்-179) |
எனச் செய்யுளியலுட் கூறப்பெற்ற மரபுகளை விரித்துக்கூறும் படலம் என்பதாம். |
தலைவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் களவிற்கும் தலைவியை முதன்மையாக வைத்துக் கூறுதல் கற்பிற்கு உரிய மரபாகும். அம்முறைமையான் குல மகளிர்க்குரிய பெருங்குணமாகிய கற்பு மனையறத்திற்கு அடிப்படையாகலின் வரைவொடு நிகழும் இல்லற ஒழுக்கம் கற்பொழுக்கம் எனப்பட்டது. |
கற்பாவது, 'உயிரினும் சிறந்ததாகக் குறிக்கொண்டொழுகும் குல மகளிரது மனத்திண்மையாம். இதனைப் ''பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்'' எனவரும் பொய்யா மொழியான் அறியலாகும். கற்பென்னும் தொழிற்பெயர் ஈண்டு ஓர் ஒழுகலாற்றினை உணர்த்தும் பண்புப் பெயராய் மனையற ஒழுக்கமாக முதுபெருங்குரவரான் வகுத்தோதப் பெற்ற நெறியினைக் குறிக்கோளாக ஏற்று அதனின்றும் வழுவாதொழுகும் மனத்திண்மையைக் குறித்து நின்றது. அதனான் அஃது இலக்கணக் குறியீடாயிற்றென்க. அது கொண்டானையே தெய்வமாகக் கொண்டு அவற்கு ஆக்கமும் புகழும் எய்தத் தன் உயிர் முதலியவற்றையும் தந்தொழுகும் செயலார்ந்த தலைவியது பண்பாகும். அத்தகு கற்புடைய மனைவியைப் பேணி அவள் வழி ஒழுகும் ஒழுக்கம் தலைவற்கு அறனாகும். |
இவ்வியலுள் ஓதப்பெறுவன ஓதற்குப் பிரியும் மறையவர்க்கும், நாடு - அறப்புறம் காத்தல், கலை வளர்த்தல். கலைஞரைப் பேணுதல். இரவலரைப் புரத்தல், புரவலரைப் போற்றுதல். பகைவரை வெல்லுதல் ஆகிய கடப்பாடுடைய வேந்தர்க்கும் |