இருப்பதனைச் சேய்மைக்கண்  நின்று கண்டு வந்து தலைவனிடம் கூறுதலே
பாங்கனுக்குக் களவியலில்   உள்ள   தொடர்பாகும்.   மற்றைய  வழியும்,
சொல்லவட் சார்த்தி புல்லிய  வகையினும் - உரை  இனிது. 10, 11,12 ஆகிய
கிளவிகள்   அகனைந்திணைக்கண்    கைக்கிளைப்பகுதி 13-17   யாழோர்
கூட்டமாகிய   ஐந்திணைப்பகுதி   18-22     ஐந்திணைக்கண்    நிகழும்
பெருந்திணைப்பகுதி என்று இவ்வுரையாளர் குறிப்பிடுவதற்குரிய இயைபுகள்
இந்நூற்பாவில்   இருப்பனவாகப்     புலப்படவில்லை.   இப்புதுக்கருத்தை
நிலைநிறுத்த மிக விரிவான விளக்கம்வேண்டும்.
 

நூ. 104 :  இந்நூற்பாவில்   பாங்கற்   கூட்டம்   தோழியிற்   புணர்வு
ஆகியவற்றுள்   நிகழும்    கூற்றுக்களின்    ஏதுக்கள்   கூறப்படுகின்றன
என்னும் உரையாளர்   பாங்கனுக்கு   இவ்ஏதுக்களை  ஏற்றிச்   சொல்லப்
பெரிதும்   இடர்ப்படுகிறார்.     ஆற்றிடை     உறுதல்,     பாங்கனால்
இடந்தலைப்பட்டுச் செல்லுங்கால் நெறிக்கண்வரும்   இடையூறு   பற்றியது
என்கிறார். நெறிக்கண் வரும் இடையூறு யாது?   இதற்கு   எடுத்துக்காட்டு
இருப்பதாகப்   புலப்படவில்லை.     பரிவுற்று   மெலியினும்   அன்புற்று
நகினும் என்பவை பாங்கற் கூட்டத்துக்கு ஏற்பனவாகத் தோன்றவில்லை.
 

நூ. 105 - 108 : 103 ஆம் நூற்பாவில் தம்மாற்  கூறப்பட்ட   தலைவன்
கூற்றுப் பகுதிகளுள்  சிலவற்றைப்   பகுத்துப்   பாங்கர்   நிமித்தமாகவும்
சிலவற்றைக் கைக்கிளைக்   குறிப்பாகவும்   சிலவற்றைப்   பெருந்திணைக்
குறிப்பாகவும்   சிலவற்றை   ஐந்திணையாகவும்   கொள்ளுவது  ஆசிரியர்
கருத்தாயின் மெய்தொட்டுப் பயிறல் என்ற நூற்பாவினை   அடுத்து   இந்த
நான்கு நூற்பாக்களையும் அமைத்து இணைப்புச்  சொல்லாகிய   அவற்றுள்
என்பதனைக்    கூனாக     நிறுத்தி    அவற்றுள்   பாங்கர்   நிமித்தம்
பன்னிரண்டாகும். அவற்றுள் முன்னைய மூன்றும்   கைக்கிளைக்  குறிப்பே
என்றாற்போல இணைத்து என்ப என்ற பிறன்கோட்   கூறல்   பொருளைச்
சுட்டும் சொல்லினைக் கொடுத்துத் தெளிவாகக்  கூறியிருப்பார்.  அங்ஙனங்
குறிப்பிடாத குறையே இவர் இந்நூற்பாக்களுக்கு  வரைந்துள்ள   உரையை
முழுமையாக ஏற்க இடையூறாக உளது. மேலும் 103 ஆம் நூற்பாவில் இவை
அமைந்துள்ளவாற்றை   விரிவான   விளக்கம்    எழுதித்    தெரிவிப்பது
இன்றியமையாதது.   இன்று  இந்நூற்பாக்களுக்கு வரையப்பட்டுள்ள ஏனைய
உரைகள் எல்லாவற்றையும் பிறர்   ஆய்வுரைகளையும்விட இவ்வுரையாளர்
உரை மிகச்  சிறப்பாக   அமைந்துள்ள திறம் பாராட்டற்குரியது.   ஏனைய
உரைகள் உளங்கொள்ள இயலாத நிலையிலேயே உள்ளன என்பது தெளிவு.
வெள்ளை வாரணனார் ஆய்வுரையின் பாடம்   பாங்கு   ஆம்   நிமித்தம்
என்பதே.