கற்பியல்125

வழங்கலும் ஆகிய கடப்பாடு  பற்றிப் பொழுது இடையிட்டுப் பிரிந்து வந்த
காலத்துத் துனியுற்றிருந்த தலைவி வாயிலார்    வேண்ட  வாயில் நேர்ந்து
ஊடல் தவிர்ந்து ஒழுகுமிடத்துத் தலைவனது பெருமை மிகுதலின், மகிழ்ந்து
கூற்று நிகழ்த்தும் என்றவாறு.
 

அப்பெருமை தலைவியான் வருதலின் "தன்னின் ஆகிய தகுதி" என்றார்.
பரத்தையர்   எள்ளியுரையாதவாறு   ஊடல்   தவிர்ந்து தலைவனை ஏற்று
ஒழுகிய உயர்வு 'தகுதி' எனப் பட்டது.
 

இக்கிளவிக்குரிய    ஒழுகலாறு   தலைவி  கருவுற்றிருக்கும்   காலத்து
நிகழ்வதாகும். தலைவி ஊடல் தவிர்ந்து  அருளுதற்கு   அஃது ஏதுவாகும்
என்க. மேல் வரும் கிளவியும் இதனைப் புலப்படுத்தும். எ - டு : வந்துழிக்
கண்டு கொள்க.
 

15) புதல்வற் பயந்த  புனிறுநீர்    பொழுதின்   நெய்யணி    மயக்கம்
புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும்  அமரர்ச்   சுட்டியும்   செய்பெருஞ்
சிறப்பொடு சேர்தற்கண்ணும் என்பது : தலைவி  புதல்வனை  ஈன்ற புனிறு
தீர்ந்தகாலை நெய் பூசி  நீராடி    வாலாமை   போக்கி   விளங்குமிடத்து
அவளைக் குறித்துத் தலைமைப் பாடுடைய மேலோர்   பாலும்,  தேவரைக்
கருதியும் செய்யும் பெரிய விழாக்கள் காரணமாக   ஈன்றணிமைக் காலத்துப்
பிரிந்திருந்த தலைவன் வந்து சேருமிடத்தும் என்றவாறு.
 

சிறப்பாவது, புதல்வனை ஏந்தி  வாழ்த்தலும்,   பெயரிடலும், ஐம்படைத்
தாலி   அணிவித்தலும்,   அவ்வழித்   தேவர்க்குப்   பூசனை   புரிதலும்
இரவலர்க்குப் பரிசில் வழங்கலும் பிறவுமாம்.  புனிறு = மகவை ஈன்றதனான்
உடம்பு எய்திய நொய்ம்மை.
 

எ - டு :

வாராய் பாண நகுகம் நேரிழை 

கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி 

நெய்யொ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் 

விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் 

புதல்வனை ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் 

திதலை யல்குல் முதுபெண் டாகித் 

துஞ்சுதி யோமெல் லஞ்சில் ஓதியெனப் 

பன்மா ணகட்டிற் குவளை யொற்றி 

உள்ளினென் உள்ளுறை எற்கண்டு மெல்ல 

முகைநாண் முறுவல் ஒன்றித் 

தகைமல ருண்கண் கைபுதைத் ததுவே 

(நற்-370)
 

இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது.