| குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை |
| குடம்நிறை தீம்பால் படூஉம் ஊர |
| புதல்வனை ஈன்றிவள் நெய்யாடினளே |
| |
இது புதல்வன் பிறந்தமை காணத் தலைவன் வந்தமையைத் தோழி கூறியது. பிறவும் சான்றோர் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க. |
16) பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடிப் புல்லிய இரவினும் என்பது : தழுவிக்கோடலாகிய பயன் பொருந்துமளவினதாகிய பஞ்சின் மெல்லணையைப் புல்லித் தலைவனைப் புல்லப் பெறாதே வருந்தினளாகிக் கிடந்த தலைவியை அணுகித் தங்குதலைக் கருதி நிறையழிந்த காலத்து அவளது மெத்தென்ற சிறிய பாதங்களை அணைத்து இரந்து நிற்குமிடத்தும் என்றவாறு. |
தலைவி வாலாமையுற்றிருந்த காலத்துத் தான் பிரிந்திருந்து புரிந்த குறையைக் கருதியவழி நிறையழிவு நேர்தல் இயல்பு என்பது விளங்க "நிறையழி பொழுதின்" என்றார். இரவினும் என்றது இரந்து நிற்றற் கண்ணும் என்றவாறு. |
| என்னை நீ செய்யினும் உணர்ந்தீவா ரில்வழி |
| முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் |
| (மருதக்கலி) |
| |
எனத்தலைவன் சீறடிப் புல்லி யிரந்தமையைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் கொள்க. |
17) உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் என்பது : அங்ஙனம் இரந்தவிடத்தும் தீராது ஊடலைத் தலைவி மிகுத்தவழி அவளைக்கூடுதல் அருமையுடைத்தாகலின், உணர்த்த உணர்ந்த பிறபிற மகளிரின் வரலாறுகளைக் கூறிப் புலவியை மாற்றுமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | "ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று |
| வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் |
| தண்டா ரகலம் புகும்" எனக்கூறி |
| . . . . . |
| நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் |
| தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் |
| ஆனா விருப்போ டணியயர்பு காமற்கு |
| வேனில் விருந்தெதிர் கொண்டு" |
| |
எனத் தலைவிக்குணர்த்தியவாறு : பிறவும் வந்துழிக் கொள்க. |