128கற்பியல்

சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை 

       

புயல்என ஒலிவரும் தாழிருங் கூந்தல் 

செறிதொடி முன்கைநம் காதலி 

அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே  

(அகம் 225)
 

எனவரும்.
 

20) சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் என்பது = பொருள்
முதலிய பிரிவின்கண் செல்வோன் மிகச் சேய்த்தாகச் சென்று அவ்விடத்துத்
தலைவியின் நிலைமையை மீண்டும் கருதிய வழியும்  என்றவாறு. கையிகந்து சென்று என மாறுக. இஃது இடைச்சுரத்து அழுங்கலாம்.
 

எ - டு :

உண்ணா மையின் உயங்கிய மருங்கின் 

ஆடாப் படிவத்து ஆன்றோர் போல 

வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும் 

கான யானை கவினழி குன்றம் 

இரந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த 

சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி 

ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு 

உடைமதி வாழிய நெஞ்சே நிலவென 

நெய்கனி நெடுவேல் எஃகின் இமைக்கும் 

மழைமருள் பஃறோல் மாவண் சோழர் 

கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை 

இறவொடு வந்து கோதையொடு பெயரும் 

பெருங்கடல் ஓதம் போல 

ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே  

(அக-123)
 

இஃது இடைச்சுரத்தழுங்கும்    நெஞ்சிற்குக்   கூறியது.  பிறவும் இவ்வாறே
கண்டு கொள்க.
 

21) காமத்தின்     வலியும்    என்பது :    காமத்தின்   வலிமையைக்
கருதியவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

"ஏஎ இவை ஓருயிர்ப் புள்ளின் இருதலையுள் ஒன்று 

போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறியென் 

ஆருயிர் நிற்குமாறியாது"  

(கலி-89)
 

என்னும் மருதக்கலியுள்  ஆற்றாமை மிகுதியாற் காமத்தின் வலி கூறியவாறு
காண்க.
 

22) கைவிடின்    அச்சமும்      என்பது :    பொருளீட்டங்   கருதி
இருதலைப்புள்ளின் ஓருயிரன்ன தலைவியைக் கைவிட்டுப் பிரியின் அவ்வழி
அவள் எய்தும் நிலைமைக்கு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு.