போவோமோ தவிர்வோமோ எனத் தானே வருந்துதலும், செலவழுங்குதலாக நெஞ்சிற்குக் கூறுதலும், தலைவியை ஐயுற வேண்டா எனக் கூறலும் பிறவுமாக அலக்கணுறுதலின் 'விழுமம்' என்றார். |
| எ - டு : | உயிரினும் சிறந்த ஓண்பொருள் தருமார் |
| நன்றுபுரி காட்சியர் சென்றனர் அவர்என |
| மனைவலித் தொழியும் மதுகைய ளாதல் |
| நீநற் கறிந்தனை யாயின் நீங்கி |
| மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் |
| கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் |
| கல்நெடுங் கவலைய கானம் நீந்தி |
| அம்மா அரிவை ஒழிய |
| சென்மோ நெஞ்சம் வாரலன் யானே. |
| (அக-245) |
இது நெஞ்சிற்குக் கூறியது. இதன்கண் உயிரினும் சிறந்த ஒண்பொருள் என்றமையானும் நன்றுபுரி காட்சியர் என்றதனானும் இஃது ஓதற் பிரிவென்பதும் கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல்நெடுங்கவலை என்றதனான் நாடு இடையிட்ட மொழி பெயர் தேம் என்பதும் விளங்குதல் காண்க. |
26) மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது : ஓதல் முதலாய பிரிவிற் பிரிந்தவன் மீண்டு வருதற்கு நேர்ந்த வகையின்கண்ணும் என்றவாறு. வரவு வாய்ந்த என்பது வரவாய்ந்த என விகாரப்பட்டு நின்றது. |
| எ - டு : | நெடுங்கழை முளிய வேனில் நீடி |
| கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் |
| வெய்ய ஆயின முன்னே, இனியே |
| ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் |
| தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே |
| (ஐங்-322) |
எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க. |
27) அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் என்பது : ஓதல் முதலாய பிரிவின்கண் ஆற்றிய அருஞ்செயல்களிடமாகப் பெருக்கமுற்று எய்திய சிறப்பின்கண்ணும் என்றவாறு. |
அவையாவன : வேற்றுநாட்டு அகல்வயிற் சென்று ஓதியும் உணர்த்தியும் எய்திய ஞானத்தான் இசை பெறுதலும், பகை வென்று தணித்துச் சீர்த்தி பெறுதலும், பணிந்தார் மாட்டுத் திறைபெற்றுயர்தலும் தூதினான் மாண்புறுதலும், பொருள் முற்றி அடைதலும், காவலான் போற்றப் பெறுதலும் பிறவுமாம். |