மனமகிழ்ச்சியே. தலைவனுடைய புறத்தொழுக்கத்தைத் தோழி மகிழ்ந்து கூறினாளாக நச்சினார்க்கினியர் குறிப்பிடவில்லை. |
நூ. 153 : "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்". "இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்" மறையின் ................ பருவரற் கண்ணும்" புது உரை எடுத்துக்காட்டின்று. "இன்னகைப் புதல்வனை ........ வாயிற் கண்ணும்" உரைக்கு எடுத்துக்காட்டுப் பொருந்துவதாக இல்லை. இழையணிந்தவர் காமக் கிழத்தியரே. மறையின் வந்த மனையோள் என்பதன்உரை ஆசிரியர் கருத்துக்கு ஏற்குமா என்பது ஐயமே. |
நூ. 154 : இச்சூத்திர உரை சிறப்பாக உள்ளது. |
நூ. 158 : செய்குறிபிழைத்தல் - குறி என்பது குறிப்பினை என்னும் உரையின் பொருத்தம் ஆய்தற்குரியது. "புனையிழாய்! என்புழி நினக்குரைக்குந்தான் என்ப" முதலிய கலியடிகள் (46) கலந்த நோய் கைம்மிகக் கண்படா என் வயின், புலந்தாயும் நீயாயின் பொய்யானே வெல்குவை-என்ற அக்கலியின் சுரிதக அடிகள் முதலியவை குறிபிழைத்துழித் தலைவன் ஊடற்கு எடுத்துக் காட்டாகலாம். குறிபிழைத்தலுக்கு அடிப்படை, தலைவி வரைதல் வேட்கையான் நிகழ்த்தும் அவன் புணர்வு மறுத்தல் துஞ்சிச் சேர்தல் முதலியன. இவற்றால் செய்குறி பிழைப்பினும் என்பதற்குத் தலைவி தான் செய்த குறியைப் பிழைப்பினும் என்ற நச்சினார்க்கினியர் உரையின் பொருத்தம் உணரப்படும். திளைப்பு வினை மறுத்தற்கும், கரந்திடத்தொழிதற்கும் இவர் வரைந்த உரையும் நோக்கற்பாலது. (மெய்-17) |
நூ. 171 : அவண்நிலையுரைத்தல்-தலைவன் இருப்பிடம் சென்று கூத்தர தம்நகரது நிலைமையை எடுத்துக்கூறுதல் என்று உரை கூறுகிறார். நகர்நிலைமை கூறற்கண் தலைவி நிலையே கூறப்படும் என்பதை உளங்கொள்ளாதது எண்ணுதற்குரியது. |
நூ. 174 : நூற்பா உரையின் பொருத்தம் ஆராய்தற்குரியது. தலைவி இன்புறுதற்கியலாமல் முதிர்ந்தமை எண்ணியும், தன்குல மரபு காரணமாக மணந்து கொள்ளப்பட்ட பின் முறை மனைவி - என்பன உரைப் பகுதிகள் தலைவன் இளையனாய்த் தலைவி இன்புறுதற்கு இயலாவாறு ஆண்டில் மூத்து விட்டார்களா? மனைவி ஆண்டில் மூத்து விட்டாள் என்று அவளினும் ஆண்டில் மூத்த தலைவன் இளையாளைத் தன் மூத்த பருவத்தில் மணத்தல் குல மரபா? என்பன எண்ணுதற்குரியன. |
நூ. 176 : இந்நூற்பா உரை வலிந்துரையாதல் தேற்றம் - விளக்கமும் அத்தகையதே. |